Operation Sindoor: "100 தீவிரவாதிகள், 40 பாக் ராணுவத்தினர் மரணம்" – முப்படை அதிகாரிகள் கூறியதென்ன?

இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல்கள் முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அடுத்தடுத்த ராணுவ நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் இன்று முப்படை அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்!

ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர் (DGMO) லெப்டினன்ட் ஜெனரல் ராஜிவ் காய், ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் இருந்த 9 தீவிரவாத முகாம்கள் மட்டுமே தாக்கப்பட்டதாகவும், தீவிரவாதிகளை மட்டுமே தாக்கியதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அவர், ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் பதுங்கியிருந்த சுமார் 100 தீவிரவாதிகள் வரை கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

விமானப்படை அதிகாரி, ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி, “ராணுவ தாக்குதல் நடக்கும்போதே பாகிஸ்தான் பயணிகள் விமானத்தை வான்தடத்தில் அனுமதித்தது. இதனால் பின்னடைவு ஏற்பட்டாலும் இந்தியா தரப்பில் கவனத்தோடு தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது.

இந்தியா தரப்பில் பயணிகள் விமானம் எதுவும் தாக்கப்படவில்லை. பொதுமக்களுக்கு பாதிப்பின்றியே பதிலடி கொடுத்தோம். தீவிரவாத முகாம்களில் துல்லியமாகக் குறிவைத்தே தாக்குதல் நடத்தினோம்.

Indin Army
Indian Army

முருத்கே தீவிரவாத முகாமில் 4 முறை தாக்குதல் நடத்தினோம். வேறெந்த கட்டமைப்பையும் தாக்கவில்லை. பாகிஸ்தானின் ஆளில்லா விமானங்கள் ட்ரோன்கள் இந்திய ராணுவ மையங்களில் தாக்குதல் நடத்த மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் முறியடிக்கப்பட்டது.” என்றார்.

40 பாகிஸ்தான் ராணுவத்தினர் மரணம்?

மேலும், “எங்கு அடித்தால் வலிக்குமோ, அங்கு அடிக்க வேண்டும் எனத் திட்டமிட்டு, விமானப்படைத் தளங்களில் தாக்குதல் நடத்தினோம்.

நாம் குறிவைத்தது பயங்கரவாதிகளை மட்டும்தான். ராணுவத்தை அல்ல. எனினும் மே 7 முதல் 10 வரை 40 வீரர்களை இழந்துள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் தகவல் தெரிவித்திருக்கிறது” என்றார்.

5 வீரர்கள் வீரமரணம்

கடற்படை அதிகாரி என்.ஏ பிரமோத், “அரபிக் கடலில் இந்திய கடற்படை தீவிர கண்காணிப்பை மேற்கொண்டது. கடற்படையும் விமானப்படையும் இணைந்து கண்காணிப்பை மேற்கொண்டோம். போர் நிறுத்தம் அமலிலிருந்தாலும் கடற்படை தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.” என்று பேசியுள்ளார்.

ஒட்டுமொத்த மோதலில் 5 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்ததாகவும், இதற்குமேல் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் தீவிரமாக பதிலடி கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.