சென்னை: “தன் எதிரில் உள்ள மனிதரின் பாலினம், சமூகத் தகுதி, சாதி, மதம், நிறம் பற்றி சிந்திக்காமல், அனைவருக்கும் சிகிச்சை வழங்கி ஆதரிக்கும் தூய உள்ளங்களுக்கு, உலக செவிலியர்நாள் வாழ்த்துகள்,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தன் எதிரில் உள்ள மனிதரின் பாலினம், சமூகத் தகுதி, சாதி,மதம், நிறம் என எதைப் பற்றியும் சிந்திக்காமல் அனைவரையும் ஒன்றுபோலக் கருதி, அன்புடன் சிகிச்சை வழங்கி ஆதரிக்கும் தூய உள்ளங்களான செவிலியர்கள் அனைவருக்கும் உலக செவிலியர் நாள் வாழ்த்துகள்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் நினைவாக – ‘விளக்கேந்திய மங்கை’ என்று உலகம் முழுவதும் போற்றப்படும் ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரே, செவிலியர் சேவையின் முன்னோடி. இவர் இத்தாலி நாட்டின் ஃபிளாரன்ஸ் நகரில் செல்வச் செழிப்புமிக்க உயர்குடும்பத்தில் பிறந்தவர். ‘இறைவனால் தனக்கு விதிக்கப்பட்ட பணியாகவே’ எண்ணி செவிலியர் பணியை சேவைமனப்பான்மையுடன் செய்தார்.
ஐரோப்பாவில் நடைபெற்ற க்ரீமியன் போரில் இரவு வேளைகளிலும் கையில் விளக்கை ஏந்திதேடிச் சென்று சேவை புரிந்தார். அவரின் நினைவாக, அவர் பிறந்தநாளான மே 12-ம் நாள் ‘சர்வதேசசெவிலியர் தினமாக’ கொண்டாடப்படுகிறது.