இந்திய டெஸ்ட் அணி விராட் கோலிக்கு முன் மற்றும் விராட் கோலிக்கு பின் என்று பிரிக்கலாம். கடந்த 10 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி பல சாதனைகளை புரிந்துள்ளார். 2014 ஆம் ஆண்டு தோனிக்கு பிறகு டெஸ்ட் கேப்டன் பொறுப்பை ஏற்று, விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி அசுர வளர்ச்சி பெற்றது. விராட் கோலியின் அக்ரசன் பலருக்கு பிடிக்கவில்லை என்பார்கள், ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதுதான் இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்தது. இந்திய மண்ணில் ஆதிக்கம் செலுத்தி வந்தாலும் வெளிநாடுகளில் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி அவ்வளவு வெற்றியை பெற்றது இல்லை. ஆனால் விராட் கோலி கேப்டன் ஆன பிறகு அதை அனைத்தையும் மாற்றி எழுதினார்.
தற்போது விராட் கோலி ஓய்வை அறிவித்துள்ள நிலையில் கிட்ட ஒரு டெஸ்ட் கேப்டனாக அவர் செய்த சாதனைகளைப் பற்றி பார்ப்போம். 2018 மற்றும் 19ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது அவர்களது மண்ணில் வெற்றி பெற்று தனது ஆதிக்கத்தை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்காவில் டெஸ்ட் போட்டிகளை வென்று சாதனை படைத்தார். அதன் பிறகு 2022ல் டெஸ்ட் கேப்டன்சி பொறுப்பில் இருந்து வெளியேறினார் விராட் கோலி. விராட் கோலி தலைமையில் இந்திய அணி 68 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அதில் 40ல் வெற்றி பெற்றுள்ளது. ரோகித் சர்மாவிற்கு பிறகு தற்போது விராட் கோலியும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளதால் இந்திய அணி சற்று தடுமாற்றத்தில் உள்ளது.
கேப்டனாக விராட் கோலியின் சாதனைகள்
கேப்டனாக இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக இரட்டை சதங்கள் அடித்த சாதனையை வைத்துள்ளார் விராட் கோலி. கடைசியாக 2019 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கடைசி வரை ஆட்டமிழக்காமல் 254 ரன்கள் அடித்திருந்தார் விராட் கோலி.
இந்திய கேப்டனாக அதிக சதங்கள் அடித்த வீரர்களில் விராட் கோலி 20 சதத்துடன் முதல் இடத்தில் உள்ளார். இவரை தொடர்ந்து சுனில் கவாஸ்கர் 11 சதங்கள் அடித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக இந்திய அணிக்காக அதிக ரன்கள் அடித்த வீரர்களில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். 68 போட்டிகளில் 20 சதம் மற்றும் 18 அரை சதங்கள் உட்பட 5864 ரன்கள் அடித்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக தோனி 3454 ரன்களும், சுனில் கவாஸ்கர் 3449 ரன்களும் அடித்து உள்ளனர்.