தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நாளை தீர்ப்பு

கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 9 பேருக்கு, கோவை மகளிர் நீதிமன்றம் நாளை ( மே 13) தீர்ப்பு வழங்குகிறது.

கோவையை அடுத்த பொள்ளாச்சியில் இளம் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் கடந்த 2019 பிப்ரவரி மாதம் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் துறையில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன், பாபு, ஹேரன்பால், அருளானந்தம் மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்தில் இருந்து, சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் 2019 ஏப்ரல் 25-ம் தேதி சிபிஐ-க்கு மாற்றம் செய்யப்பட்டது.

வழக்கின் முதல் குற்றப்பத்திரிகை 2019 மே 24-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. கூடுதல் குற்றப்பத்திரிகை 2021 பிப்ரவரி, செப்டம்பர் ஆகிய மாதங்களில் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணை தாமதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சிறப்பு ஏற்பாடாக கோவை மகளிர் நீதிமன்றத்தில் தனி அறையில் விசாரிக்கப்பட்டு வந்தது.

வழக்கில் பாதிக்கப்பட்ட 8 பெண்களில் ஒருவர் தவிர மீதமுள்ள 7 பேர் வாக்குமூலம் அளித்தனர். அதன்பேரில் கடந்த 2023 பிப்ரவரி 24-ம் தேதி முதல் நீதிபதி நந்தினிதேவி முன்னிலையில் சாட்சி விசாரணை தொடங்கி நடந்து வந்தது.

கைதான 9 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முழுவதும் வீடியோ கான்பரன்சிங் முறையில் நடத்தப்பட்டு வந்தது. மூடப்பட்ட தனி அறையில் விசாரணை நடந்தது. விசாரணையில் ஆஜராகும் சாட்சிகள், நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை.

அண்மையில் கைதான 9 பேரும் கோவை மகளிர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் நீதிபதி நந்தினிதேவி, சாட்சி விசாரணை குறித்து தனித்தனியாக சுமார் 50 கேள்விகளை கேட்டார்.தொடர்ந்து எதிர்தரப்பு சாட்சி விசாரணைக்காக பொள்ளாச்சி நகர சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவரிடம் விசாரணை நடைபெற்றது.

வழக்கில் அரசு மற்றும் எதிர் தரப்பு விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு மே 13-ம் தேதி வழங்கப்படும் என மகளிர் நீதிமன்றம் அறிவித்தது. இந்த வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினிதேவியை, கரூர் குடும்ப நல நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஆரம்பம் முதல் விசாரணை நடத்தி வரும் நீதிபதி நந்தினிதேவி, மறு உத்தரவு வரும் வரை அதே நீதிமன்றத்தில் பணிபுரிவார் என்று சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் தெரிவித்திருந்தார். இதனிடையே பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினிதேவி இன்று (மே 13) தீர்ப்பு வழங்குகிறார்.

தீர்ப்பு அறிவிக்கப்படும் என உத்தரவிடப்பட்ட நிலையில் கைதான 9 பேரும் நாளை (மே 13) காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். வழக்கில் தண்டனை விவரம் குறித்து காலை வெளியாகும். மதியம் முழு தீர்ப்பு வெளியாகும் என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதை முன்னிட்டு நீதிமன்றத்தில் நேற்று மாலை முதல் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.