மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் சித்ரா ஆகியோர் லட்சக்கணக்கானோர் திரண்ட தமிழகத்தின் முக்கியமான சித்திரைத் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கடந்த ஒரு மாதமாக இரவு, பகலாக ஓய்வில்லாமல் ஏற்பாடுகளை செய்து வெற்றிகரமாக நடத்திக் காட்டி அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளனர்.
மதுரை சித்திரைத் திருவிழாவை கடந்த காலத்தை காட்டிலும் நடப்பாண்டு சிறப்பாக நடத்துவது, மாவட்ட நிர்வாகத்துக்கும், மாநகராட்சிக்கும், காவல்துறைக்கும் சவாலாக இருந்தது. ஏனெனில், கடந்த காலத்தில் இந்த விழாவுக்காக பக்தர்கள் அதிகம் கூடும் கோரிப்பாளையம், ஆழ்வார்புரம் வைகை ஆறு, செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோடு, அரசு மீனாட்சிக் கல்லூரி போன்ற இடங்களில் எந்த கட்டுமானப் பணிகளும் நடக்கவில்லை.
அப்படியிருந்தும் கடந்த 3 ஆண்டாக தொடர்ச்சியாக நெரிசலும், ஒரு சில உயிரிப்புகளும் நடந்தது. ஆனால், இந்த ஆண்டு தல்லாக்குளத்தில் இருந்து கோரிப்பாளையம் வழியாக ஏவி மேம்பாலத்துக்கு இணையாக வைகை ஆற்று வழியாக பிரம்மாண்ட தூண்கள் அமைத்து மேம்பாலம் கட்டுமானப் பணி நடந்து வருகிறது. இந்த பணிக்காக, கடந்த 6 மாதமாக போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது. அதனால் சாதாரண நாட்களிலேயே அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.
இந்த நெருக்கடியான நிலையில் கோரிப்பாளையம், ஆழ்வார்புரம் பகுதியில் சித்திரைத் திருவிழா நடந்ததால், நடப்பாண்டு பெரும் நெரிசலும், அசம்பாவிதமும் ஏற்பட வாய்ப்புள்ளதாக அச்சம் நிலவியது. கடந்த 3 வாரமாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் சித்ரா ஆகியோர் இரவு, பகலாக சித்திரைத் திருவிழா ஏற்பாடுகளை செய்தனர். அவர்கள் மாநகர் காவல் ஆணையர் லோகநாதனுடன் இணைந்து கடந்த ஒரு வாரமாக தினமும் விழா நடக்கும் இடங்களை பார்வையிட்டு முன்னேற்பாடு பணிகளை துரிதப்படுத்தினர்.
அதனால், நடப்பாண்டு சித்திரைத் திருவிழா, சட்டம்- ஒழுங்கு பிரச்சனை இல்லாமல், சிறப்பாக நடந்துள்ளது. மாநகராட்சி ஆணையர் சித்ரா, கள்ளழகர் வரும் வழித்தடங்கள் மட்டுமில்லாது, ஆழ்வார்புரத்தில் சுவாமி ஆற்றில் இறங்கும் இடம் வரை குடிநீர், கழிப்பிட வசதிகளை சிறப்பாக செய்திருந்தார்.
செல்லூர் பாலம், யானைக்கல் தரைப்பாலம், தடுப்பணைகள் அமைந்துள்ள பகுதி, வைகை தென்கரை சாலைகள், ஒபுளா படித்துரை பாலம், வடகரை சாலை, வைகை ஆற்றில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் கிழக்குப் பகுதியில் தேனி ஆனந்தம் பின்பகுதி சாலை போன்ற இடங்களில் லட்சகணக்கான பக்தர்கள் திரண்டிருந்ததால் இப்பகுதிகளில் பக்தர்களின் பழைய ஆடைகள், முடிக் காணிக்கை, அன்னதான தட்டுகள், காலணிகள், உணவுக் கழிவு மலை போல தேக்கமடைந்தன. அவற்றை இன்று மாலை வரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் அப்புறப்படுத்திக் கொண்டு இருந்தனர். கள்ளழகர் சென்ற வழித்தடங்களில் உடனுக்குடன் தூய்மை பணிகள் முடிக்கப்பட்டன.
இம்முறை மேம்பாலத்தில் இருந்து கிழக்கு பக்கவாட்டில் ஜவுளிக்கடை அருகே சிறிய படிக்கட்டுகளுடன் கூடிய வழித்தடம் ஏற்படுத்தி, அதன் வழியே நீதிபதிகள், அமைச்சர்கள், ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட விஐபிக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வைகை ஆற்றுப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களின் கார்களுக்காக ஏவி பாலத்தில் தனி பார்க்கிங் வசதி செய்யப்பட்டிருந்தது. ஆற்றுப் பகுதியில் விஐபிகளுக்காக பார்க்கிங் வசதி செய்யப்படாததால், ஆழ்வார்புரம் பகுதியில் நெரிசல் ஏற்படுவது தடுக்கப்பட்டது.
வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கி ஏறி மண்டகப்படிக்கு செல்லும் வைகை வடகரை சாலையில் சுவாமி செல்ல ஒரு பாதையும், பக்தர்கள் அருகே நின்று தரிசிக்க தடுப்பு வேலியும் அமைக்கப்பட்டிருந்தது. அதனால் ஆழ்வார்புரம் முதல் ஒபுளா படித்துரை பாலம் வரை நெரிசலும், அசம்பாவிதமும் ஏற்படாமல் ஏராளமான பக்தர்கள் நிம்மதியாக சுவாமி தரிசனம் செய்ய முடிந்தது.