புதுடெல்லி: 19 நாட்கள் பதற்றத்துக்குப் பின் எல்லையில் மோதல்கள் அற்ற இரவு நீடித்ததாகவும், அமைதி திரும்பியுள்ளதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ராணுவம், “இந்தியாவும், பாகிஸ்தானும் சனிக்கிழமை மாலை மோதல் நிறுத்தத்துக்கு உடன்பட்டதைத் தொடர்ந்து எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டிய ஜம்மு காஷ்மீர் பகுதிகள் மற்றும் பிற சர்வதேச எல்லைகளை ஒட்டிய பகுதிகளில் மே 11 – 12 இடைப்பட்ட இரவில் அமைதி நிலவியது. குண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடு என எதுவும் நிகழவில்லை.” என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமில் தாக்குதல் நடந்தது. அதன் பின்னர் ஏப்ரல் 23 தொடங்கி மே 6 வரை எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்திவந்தது. இதனையடுத்து இந்தியா மே.7 நள்ளிரவில் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தியதிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையே வான்வழி மோதல் தொடங்கியது. இந்நிலையில், “19 நாட்களுக்குப் பின்னர் நேற்றிரவு எல்லையில் அமைதி நிலவியது.” என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
பூஞ்சில் இயல்புநிலை: இருதரப்பும் மோதல்களை நிறுத்தியுள்ள நிலையில் ஜம்மு காஷ்மீர் எல்லை கிராமமான பூஞ்சில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. பூஞ்ச் கிராமத்தில் சுரான்கோட் பகுதி எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்னர் சுரான்கோட்டில் கடுமையான தாக்குதல் நடந்தது. இதனையடுத்து அப்பகுதிவாசிகள் ஊரைவிட்டு வெளியேறினர். பக்கத்து கிராமங்களில் இருந்த பதுங்குகுழிகளில் தஞ்சம் புகுந்தனர். சிலர் ஜம்முவுக்கே சென்றனர். இப்போது எல்லையில் பதற்றம் தணிந்துள்ளதால் அவர்கள் மீண்டும் கிராமத்துக்கு திரும்ப ஆயத்தமாகிவருகின்றனர்.
இன்று (திங்கள்கிழமை) காலை நிலவரப்படி ஸ்ரீநகர், பதன்கோட், ரஜோரி, அக்னூர், ஜம்மு, குல்காம், ஸ்ரீ கங்காநகர், புட்காம் பகுதிகளில் இயல்புநிலை திரும்பிவருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சண்டிகரில் பதற்றம் தணிந்தது: சண்டிகர் துணை ஆணையர் கூறுகையில், “எல்லை கிராமங்கள் மட்டுமின்றி நகரின் பிற பகுதிகளிலும் இயல்பு நிலை திரும்பியுள்ளது. மக்கள் அன்றாட வேலைகளைத் தொடங்கியுள்ளனர். எல்லாம் சீராகச் செல்கிறது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் முன்புபோல் இயல்பாக செயல்படுகின்றன. மக்கள் வீணான வதந்திகளைப் பரப்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்றார்.
இந்தியா – பாக். மோதல் நடந்தது என்ன? முன்னதாக ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 22-ம் தேதி கொடூர தாக்குதல் நடத்தி சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேரை சுட்டுக் கொன்றனர். இதற்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை இந்திய ராணுவம் கடந்த 7-ம் தேதி மேற்கொண்டு, பாகிஸ்தான் மற்றும் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசியது. இதில், 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அமெரிக்கா, சவுதி அரேபியா, சீனா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் இந்தியா – பாகிஸ்தான் மோதலை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தின. இந்நிலையில் கடந்த 10-ம் தேதி சனிக்கிழமை இந்தியா – பாக்., மோதல்களை நிறுத்துவதற்கான உடன்பாட்டை எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று (திங்கள்கிழமை) அமைதி ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா – பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.