ரியாத்: ‘‘இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் அமெரிக்கா மத்தியஸ்தராக செயல்பட்டது’’ என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து தம்பட்டம் அடித்து வருகிறார். ஆனால், அவர் கூறுவதை எல்லாம் இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு 3 நாள் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சவுதி அரேபியா சென்றார். அங்கு சவுதி – அமெரிக்க முதலீடு கூட்டமைப்பில் அவர் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
சில நாட்களுக்கு முன் எனது நிர்வாகம், இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போரில் தலையிட்டு வெற்றிகரமாக சமரசம் செய்தது. இருதரப்பு இடையே சிறியளவில் ஏற்பட்ட மோதல், நாளுக்கு நாள் தீவிரம் அடைந்தது. இது தொடர்ந்திருந்தால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்திருப்பர். இதை நிறுத்த நான் வர்த்தக பேச்சுவார்த்தையை பயன்படுத்தினேன். இரு நாட்டு தலைவர்களிடம் நாம் வர்த்தகம் செய்யலாம் என கூறினேன்.
‘‘அணு ஆயுத வர்த்தகத்தில் நாம் ஈடுபட வேண்டாம். நாம் அருமையான வர்த்தகத்தை மேற்கொள்ளலாம். இருவரும் சக்திவாய்ந்த தலைவர்கள், நல்ல தலைவர்கள்’’ என்று கூறி போரை நிறுத்தினேன். இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மார்கோ ரூபியோ உட்பட பலர் கடினமாக உழைத்து, இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்ய சம்மதிக்க வைத்ததை பெருமையாக கருதுகிறேன். அவர்களுக்கு நன்றி. நீங்கள் செய்தது அருமையான பணி. இந்தியா – பாகிஸ்தான் தலைவர்கள் சமாதானம் ஆகிவிட்டனர் என நினைக்கிறேன். இனி இந்தியா – பாகிஸ்தான் தலைவர்கள் ஒன்றாக விருந்துக்கு செல்லலாம். இவ்வாறு ட்ரம்ப் பேசினார்.
ஆனால், இந்தியா – பாகிஸ்தான் இடையே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மத்தியஸ்தராக செயல்பட்டார் என்பதை இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது.