புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் பதவியேற்றுக்கொண்டார். டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பி.ஆர்.கவாய்க்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கண்ணா நேற்றுடன் ஓய்வு பெற்ற நிலையில் கவாய் பதவியேற்றுள்ளார்.
நவம்பர் 23-ம் தேதி ஓய்வுபெறும் வரை 6 மாதங்கள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி வகிக்க உள்ளார் கவாய். துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய மந்திரிகள், சபாநாயகர் உள்ளிட்டோர் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.
யார் இந்த கவாய்
* மராட்டிய மாநிலம் அம்ராவதியைச் சேர்ந்தவர் பி.ஆர்.கவாய், (65) 1960-ல் மராட்டிய மாநிலத்தில் பிறந்த அவர் கடந்த 1985ல் வழக்கறிஞர் சங்கத்தில் இணைந்த கவாய், மும்பை ஐகோர்ட்டில் பயிற்சி பெற்றார்.
* அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நிர்வாகச் சட்டம் தொடர்பான வழக்குகளில் முக்கிய பங்காற்றியுள்ளார். 1992ம் ஆண்டு அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.
* தொடர்ந்து, 2003ல் மும்பை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகவும், 2005ல் நிரந்தர நீதிபதியாகவும் ஆனார்.
* 2019-ம் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியான கவாய், அடுத்த சில ஆண்டுகளில் தலைமை நீதிபதி ஆகியுள்ளார்.
* முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு பின், தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து தலைமை நீதிபதியாகும் இரண்டாவது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கவாய் தீர்ப்பளித்த முக்கிய வழக்குகள்
* ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 6 பேரை விடுவித்து தீர்ப்பளித்த அமர்வில் இடம்பெற்றவர் கவாய்.
* வன்னியர்களுக்காக உள் ஒதுக்கீட்டை ரத்து செய்த அமர்விலும் கவாய் இடம்பெற்றிருந்தார்.
* ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதித்தவர் கவாய்.
* பணமதிப்பிழப்பு உறுதி, தேர்தல் பத்திரம் செல்லாது என்ற தீர்ப்பை வழங்கிய அமர்வில் அங்கம் வகித்தவர் கவாய்.