சென்னை: “பாதுகாப்பு தளவாட தொழிற்சாலைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்” என பாதுகாப்புத் துறை ஊழியர் சம்மேளனம் வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து அகில இந்திய பாதுகாப்பு ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சி.ஸ்ரீகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், டிஆர்டிஓ மாநாட்டில் பேசிய போது ராணுவ தளவாடங்கள் உற்பத்தியில் தரம் மற்றும் எண்ணிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும், பாதுகாப்பு துறை பொதுத்துறை நிறுவனங்கள் சர்வதேச தர சவால்களை எதிர்கொள்ளவும் ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்களாகவும், தரமான ஆயுதங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களாகவும் மாற்றப்படும் என தெரிவித்தார்.
இந்திய பாதுகாப்பு தளவாட தொழிற்சாலைகள் 223 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. இங்கு தயாரிக்கப்படும் ஆயுதங்கள், பீரங்கிகள், ராணுவ சீருடைகள் உள்ளிட்ட அனைத்தும் தரத்துடன் தயாரிக்கப்படுகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு இதுவரை 4 போர்களை சந்தித்துள்ளது. இந்தப்போர்களில் பாதுகாப்பு தளவாட தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த ஆயுதங்களின் தரம் குறித்து இந்திய ராணுவம் இதுவரை ஒரு புகார் கூட தெரிவித்ததில்லை.
கார்கில் போரின் போது, பாதுகாப்பு தளவாட தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் வீட்டுக்கு கூட செல்லாமல் இரவு, பகலாக பணிபுரிந்து ராணுவத்துக்கு தேவையான தளவாடங்களை தயாரித்து கொடுத்தனர். இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள 41 பாதுகாப்பு தளவாட தொழிற்சாலைகள் 7 கார்ப்பரேட் நிறுவனங்களாக மாற்றப்பட்டன.
கடந்த 4 ஆண்டுகளாக பாதுகாப்பு தளவாட தொழிற்சாலைகளில் ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனவே, இந்த காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மேலும், கார்ப்பரேட் நிறுவனங்களாக மாற்றப்பட்ட இத்தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஓய்வுபெறும் வரை அவர்கள் மத்திய அரசு ஊழியர்கள் என்ற அந்தஸ்த்தை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.