இந்திய அணியின் இரண்டு ஜாம்பவான்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா அடுத்தடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். இருவரும் அடுத்த மாதம் நடைபெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓய்வை அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர். ஏற்கனவே இருவரும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், இனி ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாட உள்ளனர். ரோஹித் மற்றும் கோலி இருவரும் 2027ஆம் ஆண்டு நடைபெறும் ஒரு நாள் உலக கோப்பையில் விளையாட ஆசைப்படுவதாக கூறப்படுகிறது, இது குறித்து விராட்கோலி ஒருமுறை பொதுவெளியிலும் பேசியுள்ளார்.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி 2027ம் ஆண்டு நடைபெறும் ஒரு நாள் உலக கோப்பையில் விளையாடுவது சந்தேகம் தான் என்று தெரிவித்துள்ளார். ரோகித் சர்மா, விராட் கோலி அடுத்த 2 ஆண்டிற்குள் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வை அறிவிக்கவில்லை என்றாலும் அவர்கள் அணியில் இடம் பிடிப்பது சிரமமே என்று தெரிவித்துள்ளார். 2027 ஆம் ஆண்டு நடைபெறும் ஒருநாள் உலக கோப்பை போட்டியை சவுத் ஆப்பிரிக்கா, ஜிம்பாவே மற்றும் நபியா நாடுகள் சேர்ந்து நடத்துகின்றன.
சுனில் கவாஸ்கர் கருத்து
“ரோஹித் மற்றும் விராட் விளையாடுவார்கள் என்று எனக்கு தோன்றவில்லை. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அவர்களுக்கு உடற்பகுதி ஒரு முக்கிய காரணமாக இருக்கும். தொடர்ந்து இருவரும் ரன்கள் அடித்து வந்தால் மட்டுமே அவர்கள் 2027 ஆம் ஆண்டு நடைபெறும் ஒரு நாள் உலக கோப்பையில் இடம் பெற வாய்ப்புள்ளது. இல்லையென்றால் இடம்பெற முடியாது. தேர்வாளர்கள் தங்களுக்குள் கேள்வி எழுப்ப வேண்டும். இன்னும் அவர்களால் அணியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா என்பதை பற்றி யோசிக்க வேண்டும், ஒருவேளை அவர்களுக்கு தோன்றினால் இருவரும் அணியில் இருக்கலாம்.
முக்கியமான கட்டத்தில் இருவரும் டெஸ்டில் இருந்து ஓய்வை அறிவித்திருப்பது, உலகிற்கு எங்களது தேவை முடிந்து விட்டது என்பதை எடுத்துக் கூறுகின்றனர். அணிக்காக கடைசிவரை கடினமாக விளையாடக் கூடிய ஒருவர் தான் வேண்டும். சீனியர்கள் ஓய்வு பெற்றுவிட்டார்கள் என்று கவலைப்படுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. இந்திய அணியின் அடுத்த கேப்டனாக பும்ரா தான் வர வேண்டும். ஏனெனில் அவர் கேப்டனாக இருக்கும் பட்சத்தில் அவரால் எவ்வளவு ஓவர்கள் வீசி முடியும் என்பது அவருக்கு தெரியும். இதனால் காயமும் தவிர்க்கப்படலாம்.
ரோகித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி இன்னும் சிறப்பாக விளையாடியிருக்கலாம். ஆனால் ரோஹித் ஒரு சிறந்த வீரர். அவர் விளையாடுவதை பார்த்து கொண்டே இருக்கலாம்” என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி சமீபத்தில் சிறப்பாக விளையாடி சாம்பியன்ஸ் டிராபியை இந்தியாவிற்கு வென்று கொடுத்தனர். அதற்கு முன்பு ரோகித் சர்மாவின் தலைமையில் டி20 உலக கோப்பை இந்தியா வென்றது. 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் கோப்பை போட்டியில் பைனலில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது இந்தியா. அதனை மனதில் வைத்து தான் இதுவரும் 2027 ஆம் ஆண்டு நடைபெறும் ஒருநாள் கோப்பையில் விளையாட வேண்டும் என்று எதிர்பார்த்து உள்ளனர்.