IPL 2025 CSK: இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடர் 10 நாள்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து, மே 17ஆம் தேதி ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்குகிறது. முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மோதுகின்றன.
IPL 2025 CSK: ஐபிஎல் அணிகளுக்கு உள்ள சிக்கல்
வரும் ஜூன் 3ஆம் தேதி வரை ஐபிஎல் தொடர் நடைபெறுகிறது. இதனால் சில சர்வதேச போட்டிகளால் ஐபிஎல் தொடருக்கு இடையூறு ஏற்படுகிறது. ஐபிஎல் நடைபெறும் இந்த காலகட்டத்தில் இங்கிலாந்து – மேற்கு இந்திய தீவுகள் அணியின் டி20 தொடர் நடைபெற இருக்கிறது. இதையடுத்து, ஜூன் 11ஆம் தேதி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற இருப்பதால் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா வீரர்களும் ஐபிஎல் தொடரில் பங்கேற்பார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதனால், ஆர்சிபி, குஜராத், மும்பை, டெல்லி, லக்னோ உள்ளிட்ட அணிகள் பிளே ஆப் சுற்று ரேஸில் இருக்கும் நிலையில், இந்த அணிகளுக்கு எந்தெந்த வெளிநாட்டு வீரர்கள் வருவார்கள், யார் யார் வர வாய்ப்பில்லை என்பது இன்னும் பெரிய கேள்வியாகவே உள்ளது. ஆனால் மறுமுனையில் பிளே ஆப் ரேஸில் இருந்து வெளியேறிவிட்ட சிஎஸ்கே அணி ரசிகர்களுக்கு மட்டும் இந்த நல்ல செய்தி வந்துள்ளது.
IPL 2025 CSK: சிஎஸ்கேவில் இவர் மட்டும் வர மாட்டார்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் கூறுகையில், “ஓவர்டனை தவிர மற்ற அனைத்து வெளிநாட்டு வீரர்களும் ஐபிஎல் தொடரில் விளையாட தயாராக இருக்கிறார்கள்” என்றார். இதன்மூலம், சிஎஸ்கே அணியில் இருந்து நாடு திரும்பிய டிவால்ட் பிரேவிஸ், சாம் கரன், பதிரானா, நாதன் எல்லிஸ், ரச்சின் ரவீந்திரா, நூர் அகமது, டெவான் கான்வே உள்ளிட்டோர் ஐபிஎல் தொடருக்கு தயாராக இருக்கிறார்கள் என்பது உறுதியாகிறது. ஓவர்டன் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 மற்றும் ஓடிஐ தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருப்பதால் அவர் வரவில்லை.
IPL 2025 CSK: சிஎஸ்கேவுக்கு இருக்கும் 2 போட்டிகள்
சிஎஸ்கே அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் மட்டுமே இருக்கின்றன. அந்த இரண்டு போட்டிகளும் ஒன்று டெல்லியிலும், மற்றொன்று அகமதாபாத்திலும் நடைபெற இருக்கிறது. சென்னையில் நடைபெற இருந்த ஒரு போட்டியும் டெல்லிக்கு மாறிவிட்டது. இதையடுத்து, டெல்லியில் ராஜஸ்தான் அணியை மே 20ஆம் தேதி அன்று இரவிலும், அகமதாபாத் நகரில் குஜராத் அணியை மே 25ஆம் தேதி அன்று மாலையிலும் சிஎஸ்கே அணி சந்திக்க இருக்கிறது.
IPL 2025 CSK: சிஎஸ்கேவின் எதிர்கால சொத்துக்கள்
மேற்சொன்ன 7 வெளிநாட்டு வீரர்களில் நான்கு பேர் மட்டுமே பிளேயிங் லெவனில் இடம்பெறுவார்கள். அதுவும் 2 போட்டிகள் மட்டுமே இருக்கிறது. குறிப்பாக, பிரேவிஸ், நூர் அகமது, பதிரானா ஆகியோரின் ஸ்பாட்கள் உறுதி எனலாம். இருப்பினும், ரச்சின் ரவீந்திரா, எல்லிஸ் ஆகியோருக்கு இந்த 2 போட்டிகளில் மீண்டும் வாய்ப்பளிக்கலாம். மேலும் அடுத்தாண்டுக்கு சிஎஸ்கே கச்சிதமான அணியை கட்டமைக்க இந்த 2 போட்டிகள் நிச்சயம் உதவும் எனலாம். அதிலும் பிரேவிஸ், நூர் அகமது ஆகியோர் சிஎஸ்கே அணியின் எதிர்கால சொத்துக்களாக இருக்கின்றனர்.