“தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறோம்!” – ஓ.பன்னீர்செல்வம் விவரிப்பு

சென்னை: “இன்றும் நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறோம்” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும், “நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கிய பின்னர் சரியான இலக்கை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்” என்று அவர் கருத்து தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழகச் செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம், கடந்த இரு நாட்களாக சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் உள்ள 38 மாவட்ட நிர்வாகிகளுடனும், மாவட்ட வாரியாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துரையாடி, அவர்களது கருத்துகளைக் கேட்டறிந்தார்.

கூட்டத்தின் முடிவில் இன்று (மே 15) அவர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள, எந்த மாதிரியான முடிவுகளை எடுத்தால், எம்ஜிஆர் உருவாக்கிய ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட சக்திக்கு நற்பெயர் கிடைக்கும் என்பதை கருத்தில் கொண்டு, கட்சி ரீதியிலான 88 மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் ஆகியோரிடம், மாவட்ட வாரியாக கருத்துகளை கேட்டு பதிவு செய்திருக்கிறோம்.

அதன் அடிப்படையில், அடுத்த 15 நாட்களில் மீண்டும் 38 வருவாய் மாவட்டங்களுக்கு மாவட்ட வாரியாக நேரடியாக சென்று, நிர்வாகிகளிடமும், பொதுமக்களிடமும் கருத்துகளைக் கேட்டு நிலையான முடிவை அறிவிப்போம். இரட்டை இலை சின்னம் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலுக்காக தற்காலிகமாக வழங்கப்பட்டது. அதை மக்களவைத் தேர்தல் வரை பயன்படுத்தி வருகின்றனர்.

நான் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு, மக்கள் ஆதரவுடன் 2-ம் இடம் பிடித்தேன். என்னை தோற்கடிக்க சூழ்ச்சிகள், சூதுகள் ஏராளமாக செய்தார்கள். எனக்கெதிராக 6 ஓ.பன்னீர் செல்வங்களை நிறுத்தினார்கள். இதை எல்லாம் மீறி ஒரு சாதாரண தொண்டனாக, சுயேச்சையாக, பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டு 3.42 லட்சம் (32 சதவீதம்) ஓட்டுகளை பெற்றேன். இது எனது போராட்டத்துக்கு கிடைத்த நியாயமான தீர்ப்பாக பார்க்கிறேன்.

சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உண்மையில் எங்களை அழைக்காதது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. இன்றும் நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறோம். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. கடந்த மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் பட்டியலில் எனது பெயர் இடம்பெற்றிருந்தது.

எம்ஜிஆர் அதிமுகவை உருவாக்கியபோது, சாதாரண தொண்டர்களும் கட்சியின் பொதுச் செயலாளராக வரும் உரிமையை, வாய்ப்பை தொண்டர்களுக்கு வழங்கினார். தொண்டர்களுக்கான இயக்கம், பின்னர் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டது. பிரிந்து கிடக்கும் அதிமுகவின் சக்திகள் ஒன்று இணைந்து செயல்பட வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியில் 9 கட்சிகள் உள்ளன. யார் தலைமையில் கூட்டணி என்று அனைத்து கட்சிகளும் கூடி முடிவெடுப்போம்.

நடிகர் விஜய் அரசியல் ரீதியான இயக்கத்தை ஆரம்பிக்கும் போதே, அதை நான் வரவேற்றேன். அவரது இலக்கு எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை அவரது அரசியல் ரீதியான செயல்பாடுகளை பார்க்கும் போதுதான் தெரியவரும். இன்றுவரை அவர் சரியான இலக்கை நோக்கிதான் சென்று கொண்டிருக்கிறார்.

தனிப்பட்ட முறையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும், பழனிச்சாமி தவிர்த்து அனைத்து தலைவர்களும் என்னுடன் பேசிக்கொண்டுதான் இருக்கின்றனர்.

எம்ஜிஆர் உருவாக்கிய, ஜெயலலிதா கடைபிடித்த அதிமுகவின் சட்டவிதி, எந்த சட்டவிதியை திருத்தம் செய்யவும், ரத்து செய்யவும் கூடாது என்று எம்ஜிஆர் வரையறுத்து எழுதினாரோ அதற்கெல்லாம் பங்கம் ஏற்பட்டுள்ளது. பொதுச் செயலாளர் பதவிக்கு 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய வேண்டும். 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டும். 5 ஆண்டு தலைமை கழக நிர்வாகியாக இருக்க வேண்டும் என விதிகளை உருவாக்கியுள்ளனர்.

ஜெயலலிதாதான் நிரந்தர பொது செயலாளர் என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவை எல்லாம் காற்றில் பறக்க விடப்பட்டது. அதை மீட்க தான் உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிக் கொண்டிருக்கிறோம். இது தொடர்பான 6 வழக்குகள் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்காக விசாரிக்கப்பட்டு வருகிறது இதன் தீர்ப்பு இறுதியானது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

எந்த ஒரு கட்சிக்கும் இல்லாத வரலாற்றை அதிமுகவுக்கு எங்கள் தலைவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். அந்த வரலாறு அதிமுகவுக்கு நிரந்தரமாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் போராடி வருகிறோம்” என்று அவர் கூறினார். இந்தச் சந்திப்பின்போது, அவருடன் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

வைத்திலிங்கம் பதில்… – அதிமுகவுடன் இணைய வாய்ப்பு உள்ளதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், “எங்களை இணைக்காமல் அதிமுக வெற்றி பெற முடியாது. இது பொதுமக்கள், கட்சிக்காரர்கள் ஆகியோரின் எண்ணம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.