விராட் கோலி ஓய்வுக்கு காரணமே பிசிசிஐ தான் – முகமது கைப் பரபரப்பு குற்றச்சாட்டு

Virat Kohli Retirement : விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து திடீரென ஓய்வு பெற்றதற்கு மிக முக்கிய காரணம் இந்திய கிரிக்கெட் வாரியம் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பிளேயர் முகமது கைப் குற்றம்சாடிடயுள்ளார். விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து விளையாடவே விரும்பினார், ஆனால் தேர்வுக்குழு அவரிடம் சில கேள்விகளையும், பிளேயிங் லெவனில் வாய்ப்பு குறைவு என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கலாம், அதனால் விராட் கோலி அவசரமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கலாம் என்றும் முகமது கைப் கூறியுள்ளார். அத்துடன் இன்னும் சில முக்கியமான பாயிண்டுகளையும் விராட் கோலி கோலி குறித்து அவர் தெரிவித்துள்ளார்.

விராட் கோலி ஓய்வு அறிவிப்பு

ஐபிஎல் முடிந்தவுடன் இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக ஜூன் 20 முதல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது. அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான பாயிண்டுகளை இந்த தொடர் தீர்மானிக்கும் என்பதால் இளம் பிளேயர்களுக்கு வாய்ப்பு கொடுக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதனால் விராட் கோலியிடம் பிசிசிஐ இது குறித்து கேள்வி எழுப்பிய நிலையில், அவர் திடீரென அதாவது இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். விராட் கோலியின் இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு மட்டுமின்றி முன்னாள் கிரிக்கெட் பிளேயர்கள் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 

முகமது கைப் விமர்சனம்

“விராட் கோலி இந்த வடிவத்தில் (டெஸ்ட் கிரிக்கெட்) தொடர விரும்பினார் என்று நான் நினைக்கிறேன். பிசிசிஐயுடன் சில உள் விவாதங்கள் நடந்திருக்க வேண்டும், தேர்வாளர்கள் கடந்த 5-6 ஆண்டுகளில் அவரது ஃபார்மை மேற்கோள் காட்டி, விராட் கோலிக்கு இனி அணியில் இடம் கிடைக்காமல் போகலாம் என்று கூறியிருக்கலாம். என்ன நடந்தது என்பது நமக்கு ஒருபோதும் தெரியாது. திரைக்குப் பின்னால் உண்மையில் என்ன நடந்தது என்பதை யூகிப்பது மிகவும் கடினம். ஆனால் விராட் கோலியின் அவசர முடிவைக் ஆச்சரியமளிக்கிறது. குறிப்பாக ரஞ்சி டிராபி விளையாடியதை கருத்தில் கொண்டால், அவர் வரவிருக்கும் டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் விளையாட விரும்பினார் என்று நான் நிச்சயமாக நினைக்கிறேன். கடந்த சில வாரங்களில் நடந்த நிகழ்வுகள் பிசிசிஐ மற்றும் தேர்வாளர்களிடமிருந்து விராட் கோலிக்கு போதுமான ஆதரவு கிடைக்கவில்லை என்பதை உறுதிபடுத்துகிறது” என்று முகமது கைஃப் கூறியுள்ளார்

ஆஸ்திரேலியாவில் என்ன தவறு நடந்தது?

ஆஸ்திரேலியாவில் விராட் கோலியின் வழக்கத்திற்கு மாறான அணுகுமுறையை பார்த்தபோதே, அவர் டெஸ்ட் பார்மேட்டில் இருந்து விலகுவதாக தெளிவான அறிகுறியை பார்த்தேன் என கைஃப் கூறியுள்ளார். “2024-25 பார்டர் கவாஸ்கர் டிராபியில் ரன்கள் எடுக்க விராட் கோலி அவசரம் காட்டினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் மணிக்கணக்கில் கிரீஸில் இருந்து கடினமாக விளையாடக்கூடிய பிளேயர் அவர். கடந்த காலங்களில் விராட் அதைச் செய்துள்ளார். ஆனால் ஆஸ்திரேலியாவில் அவர் அதை செய்யவில்லை. விராட் கோலி கொஞ்சம் பொறுமை இழந்துவிட்டதாக உணர்ந்தேன்” என்று அவர் மேலும் கூறினார்.

விராட் கோலி எடுத்த முடிவு

“நான் என் கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இருக்கிறேன் என்று விராட் கோலி நினைத்துக் கொண்டிருக்கலாம். முன்பெல்லாம் அவரிடம் வேறு மாதிரியான பொறுமை தெரிந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் பந்துகளை விட்டுவிடுவார். அவர் தனக்கான நேரத்தை எடுத்துக்கொண்டு, பந்து வீச்சாளர்களை சோர்வடையச் செய்து, பின்னர் அவர்களை ஆதிக்கம் செலுத்துவார். ஆனால் ஆஸ்திரேலியாவில் அவர் அப்படிச் செய்வதை நான் பார்க்கவில்லை. ஸ்லிப்பில் அவுட் ஆகும் அந்த முறை, அவர் மணிக்கணக்கில் கிரீஸில் இருக்கத் தயாராக இல்லை என்பதைக் காட்டியது” என்று முகமது கைப் தெரிவித்துள்ளார். இந்த காரணங்களினாலேயே விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து திடீரென ஓய்வு முடிவை அறிவித்துள்ளார் என கைப் பட்டியலிட்டுள்ளார்.

மேலும் படிங்க: கடைசி வரை விராட் கோலியால் இந்த ஒரு சாதனையை பூர்த்தி செய்ய முடியவில்லை!

மேலும் படிங்க: இந்த சிஎஸ்கே வீரர் அணிக்கு திரும்புவது சந்தேகம் தான்? என்ன செய்யப் போகிறது நிர்வாகம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.