மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தார். இந்திய அணிக்காக கடந்த 2011-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆன அவர் 123 போட்டிகளில் விளையாடி அதில் 30 சதம் உட்பட 9,230 ரன்கள் குவித்துள்ளார்.
மேலும் 68 போட்டிகளில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ள விராட் அதில் 40 போட்டிகளை வென்று கொடுத்து இந்திய அணிக்காக அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டனாகவும் வரலாறு படைத்துள்ளார். அந்த சூழலில் தற்போது ஓய்வு பெற்றுள்ள விராட் கோலி குறித்து பல முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், விராட் ஓய்வை அறிவிக்கும் முன்னர் தான் அவரிடம் பேசியதாகவும், அப்போது அவர் கூறியவற்றையும் இந்திய முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, ஆம். ஓய்வு முடிவை அறிவிப்பதற்கு ஒரு வாரம் முன்பாக நான் விராட் கோலியிடம் பேசினேன். அப்போது அனைத்தையும் கொடுத்து விட்டோம் என்ற தெளிவு அவருடைய மனதில் இருந்தது. அவரிடம் எந்த கவலையும் வருத்தமும் இல்லை. தனிப்பட்ட முறையில் அவரிடம் சில கேள்விகளை நான் கேட்டேன்.
அப்போது என்னுடைய மனதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆம், இதுவே ஓய்வுக்கான சரியான நேரம் என்பதில் விராட் கோலி தெளிவாக இருந்தது தெரிந்தது. இதுவே நாம் விடை பெறுவதற்கான நேரம் என்று அவருடைய மனம் அவரின் உடலுக்கு சொன்னது. பொதுவாக விராட் கோலி எதையாவது செய்ய முடிவெடுத்தால் அதற்காக தன்னுடைய 100 சதவீத பங்களிப்பை கொடுப்பார். அதை மற்றவர்கள் செய்வது எளிதல்ல.
விராட் கோலி குறித்து கூற வேண்டும் என்றால், அவரிடம் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் டெஸ்ட் கிரிக்கெட் இருப்பதாக நினைத்தேன். உங்கள் உடல் அதற்குத் தகுந்தவாறு தகுதியாக இருப்பது போல உணரலாம். மேலும் அணியில் உள்ள பாதி பேரை விட பிட்னஸ் அதிக அளவில் சிறப்பாக இருக்கலாம். ஆனால், மனதளவில் நீங்கள் நிலையாக இல்லாத போது அது உடலுக்குச் செய்தியை அனுப்புகிறது. அப்போது அது உங்களுக்கு தெரியும் இது இதோடு நின்று விடும் என்று. இவ்வாறு அவர் கூறினார்.