ராமதாஸ் கூட்டத்தைப் புறக்கணித்த அன்புமணி: பாமகவில் புதிய சலசலப்பும் பின்னணியும்!

விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸ், திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தை அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்துள்ளது அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாமக மாவட்டத் தலைவர் மற்றும் செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் இன்று (மே 16) நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்த அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமை வகித்தார். கவுரவத் தலைவர் ஜி.கே.மணி எம்எல்ஏ, மாநில பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், சேலம் மேற்கு எம்எல்ஏ அருள், தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், ராமதாஸ் பேரனும் மாநில இளைஞர் அணி தலைவருமான முகுந்தன், புதுச்சேரி மாநில அமைப்பாளர் கணபதி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சிலர் மட்டுமே பங்கேற்றனர்.

பாமக செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ், எம்எல்ஏக்கள் மயிலம் சிவக்குமார், தருமபுரி வெங்கடேஸ்வரன், மேட்டூர் சதாசிவம் ஆகிய 3 பேர் மற்றும் மாநில பொருளாளர் திலகபாமா உட்பட 80 சதவீத நிர்வாகிகள் பங்கேற்கவில்லை. கட்சி ரீதியாக 90-க்கும் மேற்பட்ட மாவட்ட நிர்வாகிகளை பாமக கொண்டுள்ளது. அதன்படி நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்று இருந்தால் சுமார் 180 பேர், கூட்டம் நடைபெற்ற இடத்தில் இருந்திருக்க வேண்டும். ஆனால், சுமார் 40 பேர் என்ற சொற்ப எண்ணிக்கையில் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இக்கூட்டதைப் புறக்கணித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால், காலை 10 மணிக்கு தொடங்க வேண்டிய கூட்டம், ஒரு மணி நேரம் தாமதமாக 11 மணிக்கு தொடங்கி 2 மணி நேரம் நடைபெற்று முடிந்தது. கூட்டத்துக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியது, “மாமல்லபுரத்தில் 10 லட்சம் மக்கள் கூடிய பிரமாண்ட மாநாட்டை பாமக நடத்தி உள்ளது. இதற்காக பாடுபட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் பாராட்டுகள். தமிழகத்தில் 50 தொகுதிகளில் பாமக வெற்றி பெற வேண்டியதற்கான ஆலோசனைகளை பகிர்ந்து கொள்வதே, இக்கூட்டத்தின் நோக்கமாகும்.

படுத்துக்கொண்டே வெற்றி பெறுவோம் என சொல்லுவோமே, அதைபோல படுத்துக்கொண்டு வெற்றி பெறுவது எப்படி என்று எனக்கு தெரிந்த வித்தையை, நிர்வாகிகளுக்கு தெரிவிப்பதற்காக கூட்டம் நடத்தப்படுகிறது. தொடர்ந்து ஒரு வாரத்துக்கு அணி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளேன். செயல் தலைவர் அன்புமணி ராமதாஸுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது. அவர் வரலாம், வந்து கொண்டிருக்கலாம். மாநாட்டுக்காக கடுமையான வெயிலில் பணியாற்றியதால் மாவட்ட நிர்வாகிகள் சிலருக்கு களைப்பு ஏற்பட்டிருக்கலாம். தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு, கூட்டத்தில் பங்கேற்காததற்கான காரணத்தை தெரிவித்து உள்ளனர்.

2 மாதமாக, அங்கேயே உட்கார்ந்து உழைத்த காரணத்தால் திருக்கச்சூர் ஆறுமுகத்தை பாராட்டினேன். செயல் தலைவர் அன்புமணி என அவரது பெயரையும் குறிப்பிட்டேன். கூட்டத்தில் பங்கேற்காதவர்களை, அவர்கள் விரும்பும் வரை பதவியில் இருந்து நீக்க தேவையில்லை. என்னால் செயல்பட முடியவில்லை என அவர்களது சூழ்நிலையைக் குறிப்பிட்டு கடிதம் கொடுத்தால் மட்டும் மாற்றப்படுவர். இல்லையென்றால் மாற்றுவதற்கு அவசியம் இல்லை.

சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி நிச்சயம் அமைப்போம். வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு பெற மிக கடுமையாக போராட வேண்டும் என மாநாட்டு மேடையில் முழங்கினேன். சிங்கத்துக்கு காலில் பழுதுப்பட்டாலும் சீற்றம் குறையவில்லை என சுப்பிரமணிய ஐயர் கூறினார். சிங்கத்தின் கால்கள் பழுதுபடவே இல்லையே, அப்படியென்றால் சீற்றம் அதிகமாகதான் இருக்கும் என பதில் அளித்தேன். ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற சீற்றம் குறையவில்லை” என்று அவர் கூறினார்.

பாமகவில் தந்தைக்கு மகனுக்கும் இடையே கோஷ்டி பூசல் உள்ளதே என்ற கேள்விக்கு பதில் அளித்த ராமதாஸ், “கோஷ்டி எப்போது வரும் என்றால், மார்கழி மாதத்தில் பஜனை கோஷ்டிதான் வரும்” என்று பதிலளித்தார். கூட்டம் முடிந்து வெளியே வந்த மாநில பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் கூறும்போது, “தேர்தல் பணியை தொடங்கி விட்டோம். தேர்தலை எதிர்கொள்ள ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. செயல் தலைவர் அன்புமணி ராமதாசுக்கு வேறு பணி இருந்ததால், பங்கேற்கவில்லை. அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்றனர். தேர்தல் பணி குறித்த ஒற்றை தீர்மானம் மட்டும் நிறைவேற்றப்பட்டது” என்றார்.

அவரைத் தொடர்ந்து ஜி.கே.மணியின் வருகைக்காக செய்தியாளர்கள் காத்திருந்தனர். இதையறிந்த அவர், செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்ப்பதற்காக, நிறுவனர் ராமதாஸ் இல்லத்தில் மற்றொரு வாசல் வழியாக பிற்பகல் 2.20 மணிக்கு காரில் வேகமாக புறப்பட்டுச் சென்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.