இஸ்லாமாபாத்: ஆபரேஷன் சிந்தூரின்போது தங்கள் நாட்டின் முக்கிய விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது பற்றி பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முதன்முறையாக வெளிப்படையாகப் பேசியுள்ளார். கடந்த 10-ம் தேதி அதிகாலை 2.30 மணி அளவில் அந்தத் தகவலை ராணுவ தளபதி ஜெனரல் அசிம் முனீர் தன்னிடம் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, நேற்று (வெள்ளிக்கிழமை) இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற நிகழ்வில் இதனை அவர் தெரிவித்துள்ளார். “மே.10 அதிகாலை 2.30 மணி அளவில் எனக்கு ஜெனரல் முனீர் போன் செய்தார். அப்போது நமது நாட்டின் முக்கிய விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளதாக அவர் கூறினார். அது மிகவும் சங்கடம் தந்த தருணம்” என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார். இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த தாக்குதல் நடந்துள்ளதாக தெரிகிறது.
“பாகிஸ்தானும் இந்தியாவும் அமைதியான அண்டை நாடுகளைப் போல காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளைத் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். அமைதி நிலவினால் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் நம்மால் ஒத்துழைக்க முடியும்” என ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயார்: காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து சர்ச்சைக்குரிய பிரச்சினைகளுக்கும் தீர்வு காண இந்தியாவுடன் ஒருங்கிணைந்த பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சரும், துணை பிரதமருமான இஷாக் தர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்தியா உறுதி: பாகிஸ்தானுடனான எந்தவொரு பேச்சுவார்தையும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்ததாக மட்டுமே இருக்கும். ஒப்படைக்க வேண்டிய பயங்கரவாதிகளின் பட்டியல் பாகிஸ்தானிடம் உள்ளது. அவர்கள் பயங்கரவாதிகளின் கட்டமைப்பை மூட வேண்டும். இந்தியா பாகிஸ்தான் பிரச்சினையில் மூன்றம் தரப்பு மத்தியஸ்தம் செய்வதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஏற்கெனவே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.