இஸ்லாமாபாத்: இந்தியா – பாகிஸ்தான் இடையே நீடித்த போர் நிறுத்தம், பேச்சுவார்த்தை மற்றும் நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளை உறுதி செய்ய அமெரிக்காவுடன் இணைந்து பிரிட்டன் பணியாற்றி வருவதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் லாம்மி தெரிவித்துள்ளார்.
மேலும் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் கீழ் தங்களின் கடமைகளை நிறைவேற்ற அனைத்து தரப்பையும் அவர் வலியுறுத்தினார்.
இரண்டு நாள் பாகிஸ்தான் பயணத்தின் இறுதி நாளில் சர்வதேச ஊடகத்திடம் பேசிய டேவிட் லாம்மி கூறுகையில், “நீடித்த போர் நிறுத்தம் ஏற்படுவதற்கும், பேச்சுவார்த்தை நடப்பதை உறுதி செய்வதற்கும், இந்தியா – பாகிஸ்தான் இடையே நம்பிக்கை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளை உருவாக்குவதற்கும் அமெரிக்காவுடன் இணைந்து நாங்களும் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். அனைத்து தரப்பினரும் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் கீழ் தங்களின் கடமையை நிறைவேற்றிட நாங்கள் வலியுறுத்துவோம்.
பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தானுடன் இணைந்து பிரிட்டன் தொடர்ந்து போராடும். பயங்கரவாதம் அந்த நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் பிராந்தியத்துக்கும் ஒரு பெரும் களங்கம். இந்தியா பாகிஸ்தான் இரண்டும் நீண்ட வரலாற்றினைக் கொண்ட அண்டை நாடுகள். ஆனால் இந்தக் கடந்த காலத்தினால் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாத அண்டை நாடுகள். இனி இவர்களுக்குள் மோதல் ஏற்படக் கூடாது என்பதையும், போர்நிறுத்தம் நீடிப்பதையும் உறுதி செய்ய நாங்கள் விரும்புகிறோம்.” என்று பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் கூறினார்.
வர்த்தகத்தைக் காட்டி இந்தியா – பாகிஸ்தானை அணு ஆயுதப் போரில் இருந்து மீட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 7-வது முறையாக கூறியிருக்கும் நிலையில், பிரிட்டன் வெளியுறவு அமைச்சரின் இந்தப் பேட்டி வந்துள்ளது.
இதனிடையே ஜம்மு காஷ்மீர் தொடர்பான பிரச்சினைகள் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான தனிப்பட்ட பிரச்சினை என்ற இந்தியாவின் நீண்டகால நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தது.
இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் தொடர்ந்தால் இரண்டு நாடுகளுடனும் வர்த்தகத்தை நிறுத்திவிடும் என அமெரிக்கா மிரட்டியதாக அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் கூறியது தொடர்பாக கேட்கப்பட்டபோது, வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரன்திர் ஜெய்ஸ்வால், “ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடந்தபோது இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நடந்த பல உரையாடல்களில் வர்த்தகம் முக்கிய விஷயமாக இருக்கவில்லை.” என்று தெரிவித்தார்.
தெற்காசியாவில் உள்ள இரண்டு அணு ஆயுத நாடுகளுக்கிடையே பல தசாப்தங்களில் இல்லாத அளவில் கடந்த வாரத்தில் ஏற்பட்ட மோதல் பதற்றத்தை தணிப்பதில், அமெரிக்காவுடன் இணைந்து, பிரிட்டனும் பிற நாடுகளும் முக்கிய பங்காற்றின என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.