How to Apply PMAY Tamil Explainer : பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) என்பது மத்திய அரசின் வீட்டுவசதித் திட்டமாகும். இது பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு சொந்த வீடுகளைக் கட்ட நிதி உதவி வழங்குகிறது. இந்தத் திட்டம், கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு மானிய விலையில் வீடுகளை கட்டிக்கொடுக்க உதவுகிறது. எஸ்சி, எஸ்டி மற்றும் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள குடும்பங்கள் இந்த திட்டம் மூலம் பயன்பெறலாம்.
விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் வீடு கட்ட நினைத்தால் இப்போதே விணப்பிக்கலாம். இந்த ஆண்டுக்கான காலக்கெடு டிசம்பர் 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. PMAY வலைத்தளத்தின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இந்தத் திட்டத்தின் கீழ் 92.61 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன் சொந்த வீடு இல்லாதவர்களை ஒரு வீட்டுக்கு உரிமையாளராக்கியுள்ளது.
தகுதி – வருமானம், சாதி மற்றும் வீட்டுவசதி நிலை ஆகியவற்றின் அடிப்படையில் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். உங்களிடம் நிரந்தர வீடு இல்லையென்றால், நீங்களும் இந்தத் திட்டத்தின் கீழ் தகுதி பெறலாம்.
PMAY – நகர்ப்புறம்
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா – நகர்ப்புறம் (PMAY-U) திட்டத்தின் கீழ் சலுகைகளைப் பெற, விண்ணப்பதாரர்கள் பின்வரும் வருமானம் உள்ளிட்ட விதிமுறைகளை பூர்த்தி செய்ய வேண்டும்:
1. பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவு (EWS): ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சம் வரை உள்ள குடும்பங்கள் மற்றும் இந்தியாவில் எங்கும் ஏற்கனவே ஒரு வீடு இல்லாத குடும்பங்கள்.
2. குறைந்த வருமானக் குழு (LIG): ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சம் முதல் ரூ. 6 லட்சம் வரை உள்ள குடும்பங்கள், அவர்களுக்கும் ஒரு வீடு சொந்தமாக இல்லை என்பதை உறுதிபடுத்த வேண்டும்.
3. நடுத்தர வருமானக் குழு (MIG-I): ஆண்டுக்கு ரூ. 6 லட்சம் முதல் ரூ. 9 லட்சம் வரை சம்பாதிக்கும் குடும்பங்கள், வீடு இல்லாதவர்கள்.
நகர்ப்புறங்களில் குடிசைப் பகுதிகள் அல்லது முறைசாரா குடியிருப்புகளில் தற்போது வசிக்கும் குடும்பங்களும் இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியுடையவர்கள்.
PMAY கிராம்பபுறத்துக்கான தகுதி
சமூக-பொருளாதார மற்றும் சாதி கணக்கெடுப்பு (SECC) தரவுகளில் பட்டியலிடப்பட்டுள்ள குடும்பங்கள். வீடு இல்லாத குடும்பங்கள் அல்லது குடிசை வீடுகளில் வசிப்பவர்கள் தகுதியுடையவர்கள்
யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது?
ஒரு நிரந்தர வீட்டில் வசிக்கும் குடும்பங்கள். மோட்டார் வாகனம் அதாவது, இரு சக்கர வாகனம், மூன்று சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்க முடியாது. டிராக்டர் உள்ளிட்ட விவசாய வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்க முடியாது. ரூ. 50,000 அல்லது அதற்கு மேற்பட்ட கடன் வரம்புடன் கிசான் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள், வீட்டில் ஏதேனும் அரசு ஊழியர் இருப்பவர்கள், சொந்தமாக தொழில் நிறுவனத்தை வைத்திருப்பவர்கள், வருமான வரி, தொழில் வரி செலுத்துபவர்கள் விண்ணப்பிக்க முடியாது. அதேபோல், 2.5 ஏக்கருக்கு மேல் பாசன நிலம் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)-க்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY), நகர்ப்புறம் (PMAY-U) மற்றும் கிராமின் (PMAY-G) என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.
PMAY-Urban (PMAY-U)-க்கு விண்ணப்பிப்பது எப்படி?
– PMAY-U 2.0 அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும்.
– முகப்புப் பக்கத்தில் உள்ள ‘PMAY-U 2.0-க்கு விண்ணப்பிக்கவும்’ பட்டனைக் கிளிக் செய்யவும்.
– வழிகாட்டுதல்களை படித்தபிறகு Click to Proceed என்பதைக் கிளிக் செய்யவும்.
– தேவையான அனைத்து ஆவணங்களையும் தயாராக வைத்திருந்த பிறகு ‘Proceed’ என்பதைக் கிளிக் செய்யவும்.
– தகுதிப் படிவத்தை நிரப்பி ‘Check Eligibility’ என்பதைக் கிளிக் செய்யவும்.
– உங்கள் ஆதார் எண்ணை வழங்கவும் மற்றும் OTP-ஐப் பயன்படுத்தி அதைச் சரிபார்க்கவும்.
– சரிபார்க்கப்பட்டதும், நீங்கள் விண்ணப்பப் படிவத்திற்கு திருப்பி விடப்படுவீர்கள். தேவையான அனைத்து விவரங்களையும் துல்லியமாக உள்ளிடவும்.
– தேவையான ஆவணங்களைப் பதிவேற்றி கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும்.
– உங்கள் விண்ணப்பத்தை நிரப்ப ‘Save’ என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் பதிவுகளுக்கான படிவத்தை பிரின்ட் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.
கிராம்புறத்தில் (PMAY -G) விண்ணப்பிப்பது எப்படி?
– அதிகாரப்பூர்வ PMAY-G போர்ட்டலுக்குச் செல்லவும்.
– உங்கள் தனிப்பட்ட தகவலை நிரப்பவும், ஒப்புதல் படிவத்தைப் பதிவேற்றவும், ‘Search’ என்பதைக் கிளிக் செய்யவும்.
– தேடல் முடிவுகளிலிருந்து உங்கள் பெயரைத் தேர்ந்தெடுத்து ‘பதிவு செய்யத் தேர்ந்தெடுக்கவும்’ என்பதைக் கிளிக் செய்யவும்.
– பயனாளி விவரங்கள் தானாக நிரப்பப்படும். வங்கிக் கணக்கு மற்றும் திட்ட ஒருங்கிணைப்பு விவரங்களை manually சேர்க்கவும்.
-இறுதியாக அரசு ஊழியர்களால் விண்ணப்பம் சரிபார்க்கப்படும்
PMAY விண்ணப்பத்திற்கு தேவையான ஆவணங்கள்
ஆதார் அட்டை, ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு விவரங்கள், வருமானச் சான்று, நில உரிமை ஆவணங்கள், MGNREGA வேலை அட்டை, விண்ணப்பதாரருக்கு சொந்தமாக ஒரு வீடு இல்லை என்பதை உறுதிப்படுத்தும் பிரமாணப் பத்திரம் கொடுக்க வேண்டும்.