மீண்டும் தொடங்கும் ஐ.பி.எல்.: பெங்களூரு-கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை

பெங்களூரு,

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறிவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதனிடையே இந்தியா – பாகிஸ்தான் ஏற்பட்ட போர்ப்பதற்றம் காரணமாக ஐ.பி.எல். தொடர் ஒரு வார காலம் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது இந்தியா- பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வந்த நிலையில் பாதியில் நிறுத்தப்பட்ட 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இன்று (சனிக்கிழமை) மீண்டும் தொடங்குகிறது.

முன்னதாக ஐ.பி.எல். போட்டி இன்று (சனிக்கிழமை) தொடங்கி ஜூன் 3-ந் தேதி வரை நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் கடந்த 12-ந் தேதி அறிவித்தது. எஞ்சிய ஆட்டங்களுக்கான திருத்தி அமைக்கப்பட்ட அட்டவணையும் வெளியிடப்பட்டது.

இதன்படி பாதியில் ரத்து செய்யப்பட்ட பஞ்சாப்- டெல்லி அணிகள் இடையிலான மோதல் உள்ளிட்ட 13 லீக் ஆட்டங்கள் பெங்களூரு, ஜெய்ப்பூர், டெல்லி, லக்னோ, மும்பை, ஆமதாபாத் ஆகிய நகரங்களில் அரங்கேறுகிறது. லீக் சுற்று வருகிற 27-ந் தேதி நிறைவு பெறுகிறது.

முதலாவது தகுதி சுற்று 29-ந் தேதியும், வெளியேற்றுதல் சுற்று 30-ந் தேதியும், இரண்டாவது தகுதி சுற்று ஜூன் 1-ந் தேதியும், இறுதிப்போட்டி ஜூன் 3-ந் தேதியும் நடைபெறுகிறது. ‘பிளே-ஆப்’ சுற்று நடைபெறும் இடங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில், 8 நாள் இடைவெளிக்கு பிறகு திருத்தி அமைக்கப்பட்ட புதிய அட்டவணையின்படி 58-வது லீக் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொள்கிறது.

ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணி 11 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 3 தோல்வி என 16 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி தனது கடைசி 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றியை ருசித்து வீறுநடை போடுகிறது. அந்த அணி இன்னும் ஒரு வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைத்து விடும். இதனிடையே போட்டி தள்ளிவைக்கபட்டதால் தாயகம் திரும்பிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் இந்தியா வரவில்லை. 18 விக்கெட்டுகள் (10 ஆட்டம்) வீழ்த்திய அவர் ஒதுங்கி இருப்பது அந்த அணிக்கு பெருத்த பின்னடைவாகும்.

பெங்களூரு அணியில் பேட்டிங்கில் விராட்கோலி (505 ரன்) சூப்பர் பார்மில் இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர் ஆடும் முதல் ஆட்டம் என்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. கேப்டன் ரஜத் படிதார், டிம் டேவிட், ஜேக்கப் பெத்தேல் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், லுங்கி இங்கிடி, சுயாஷ் ஷர்மா பலம் சேர்க்கின்றனர்.

கொல்கத்தா அணி 12 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 6 தோல்வி, ஒரு முடிவில்லை (பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து) என 11 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது. அந்த அணி எஞ்சிய இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று நல்ல ரன்-ரேட்டுடன் இருப்பதுடன், மற்ற அணிகளின் முடிவும் சாதகமாக அமைந்தால் மட்டுமே அடுத்த சுற்றுக்கான கதவு திறக்கும்.

கொல்கத்தா அணியில் பேட்டிங்கில் கேப்டன் ரஹானே, அங்கிரிஷ் ரகுவன்ஷி, ரிங்கு சிங் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். வெங்கடேஷ் அய்யரின் பேட்டிங் மெச்சும்படி இல்லை. ஆல்-ரவுண்டர்களாக சுனில் நரின், ஆந்த்ரே ரஸ்செல் அவ்வப்போது கைகொடுக்கிறார்கள். பந்து வீச்சில் வருண் சக்ரவர்த்தி, வைபவ் அரோரா, ஹர்திஷ் ராணா மிரட்டக்கூடியவர்கள். சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலி (இங்கிலாந்து) விலகி இருப்பது பாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது.

கொல்கத்தாவுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்த பெங்களூரு அணி தனது ஆதிக்கத்தை தொடர்ந்து அடுத்த சுற்றுக்கு முதல் அணியாக நுழைய தீவிரம் காட்டும். அதேநேரத்தில் பதிலடி கொடுத்து அடுத்த சுற்று வாய்ப்பை இழக்காமல் இருக்க கொல்கத்தா அணி எல்லா வகையிலும் போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

இவ்விரு அணிகளும் இதுவரை 35 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் கொல்கத்தா 20 ஆட்டங்களிலும், பெங்களூரு 15 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

பெங்களூருவில் நேற்று மழை பெய்தது. இதேபோல் இன்றும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. ஒரு வேளை மழையால் ஆட்டம் கைவிடப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டால் கொல்கத்தாவின் அடுத்த சுற்று கனவு தகர்ந்து விடும்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்:-

பெங்களூரு: விராட் கோலி, பில் சால்ட், ஜேக்கப் பெத்தேல் அல்லது மயங்க் அகர்வால், ரஜத் படிதார் (கேப்டன்), ஜிதேஷ் ஷர்மா, டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்டு, குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், லுங்கி இங்கிடி, யாஷ் தயாள், சுயாஷ் ஷர்மா.

கொல்கத்தா: ரமனுல்லா குர்பாஸ், சுனில் நரின், அஜிங்யா ரஹானே (கேப்டன்), வெங்கடேஷ் அய்யர், அங்கிரிஷ் ரகுவன்ஷி அல்லது மனிஷ் பாண்டே ,ரிங்கு சிங், ஆந்த்ரே ரஸ்செல், ரமன்தீப் சிங், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, அன்ரிச் நோர்டியா அல்லது ஸ்பென்சர் ஜான்சன்.

நடப்பு தொடரில் இதுவரை எந்த அணியும் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) தகுதி பெறவில்லை. 5 முறை சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் சாம்பியன்களான ராஜஸ்தான் ராயல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன. 4 பிளே-ஆப் இடங்களுக்கு 7 அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.