இண்டியா கூட்டணி பலவீனமாக இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் மற்றும் மிருதுஞ்சய் சிங் யாதவ் ஆகியோர் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ப. சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது: இண்டியா கூட்டணி வலுவாக இருப்பதாக மிருதுஞ்சய் சிங் கூறுகிறார். ஆனால், அவர் கூறியதுபோல் இண்டியா கூட்டணியின் எதிர்காலம் பிரகாசமாகவோ, வலுவாகவோ இல்லை. இண்டியா கூட்டணி அப்படியே இருப்பதாக அவர் பார்க்கிறார். ஆனால், எனக்கு அப்படி உறுதியாக தெரியவில்லை. இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் மட்டுமே பதில் அளிக்க முடியும்.
ஏனென்றால் இண்டியா கூட்டணியின் பேச்சுவார்த்தை குழுவில் சல்மான் குர்ஷித் இடம் பிடித்திருந்தார். கூட்டணி முற்றிலும் உறுதியாக இருந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். தற்போது அப்படி உறுதியாக இருப்பதுபோல் தெரியவில்லை. இண்டியா கூட்டணி பலவீனமாக இருக்கிறது. இந்த கூட்டணியை இன்னும் ஒன்றாக இணைக்க முடியும் என நம்புகிறேன். அதற்கு இன்னும் நேரம் உள்ளது. எனவே, இண்டியா கூட்டணியை ஒருங்கிணைக்க முடியும்.
எனது அனுபவத்திலும், வரலாற்று படிப்பினையிலும் சொல்கிறேன். பாஜகவைப் போல வலிமையான முறையில் ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் கட்சி வேறு எதுவும் இருந்ததில்லை. ஒவ்வொரு துறையிலும் அது வலிமையானதாக இருக்கிறது. பாஜகவை அரசியல் கட்சி என்பதை விட ஒரு இயந்திரம் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். பாஜக ஒரு இயந்திரம். அதை பின்னாலிருந்து வேறு ஒரு இயந்திரம் இயக்குகிறது. இரண்டு இயந்திரங்களும் சேர்ந்து, தேர்தல் ஆணையம் முதல் நாட்டின் கடைக்கோடியில் உள்ள காவல் நிலையம் வரை அனைத்து இயந்திரங்களையும் கட்டுப்படுத்துகின்றன.
வலிமையான இயந்திரத்தை அனைத்து முனைகளிலிருந்தும் நாம் எதிர்கொள்ள வேண்டும். இந்த புத்தகத்திலிருந்து நான் பெறும் செய்தி ஒன்றுதான். 2029 நாடாளுமன்ற தேர்தலில் நாம் வலுவான ஜனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நாம் சரி செய்ய முடியாத இடத்துக்கு சென்றுவிடுவோம். அந்த வகையில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் மிக முக்கியமானதாகும். அதற்கு நமக்குப் போதிய நேரம் உள்ளது. இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்.