mobile screen recording security : ஸ்மார்ட்போன் யுகத்தில் ஒளிவு மறைவுக்கு எல்லாம் இடமே இல்லை. எங்கு என்ன செய்து கொண்டிருந்தாலும், உங்களிடம் செல்போன் ஒன்று மட்டும் இருந்துவிட்டால், உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்துகூட உங்களை கண்காணிக்க முடியும். அதுவும் உங்கள் ஸ்மார்ட்போனின் கேமர வழியாக நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று பார்க்க முடியும். நீங்கள் கேமரா ஆன் பண்ணவே தேவையில்லை. ஹேக்கர்களே உங்களுக்கு தெரியாமல் கேமரா ஆன் செய்து பார்த்துக் கொள்வார்கள். அதேபோல் நீங்கள் என்ன பார்க்கிறீர்கள் என்பதை கூட உங்கள் மொபைலில் ஆட்டோமேடிக்காக ஸ்கிரீன் ரெக்கார்டு செய்து அந்த வீடியோவை உங்களுக்கு தெரியாமலேயே ஷேர் செய்து கொள்ளவும் முடியும்.
இந்த விஷயம் உங்களுக்கு பயத்தை ஏற்படுத்தலாம். ஆனால் நிதர்சமான உண்மை. தொழில்நுட்பம் அந்தளவுக்கு வளர்ந்துவிட்டது. இருப்பினும் கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக இருந்தால் ஹேக்கர்களின் ஊடுருவலை முறியடிக்க முடியும். உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளவும் முடியும். ஏனென்றால் அதற்கான கன்ட்ரோல் நம்மிடம் இருக்கிறது. நாம் அஜாக்கிரதையாக இருக்கும்போது மட்டுமே இப்படியெல்லாம் நடக்கும். சரி, இப்போது உங்கள் மொபைல் ஸ்கிரீன் ரெக்கார்டு செய்யப்படுவது குறித்த அடிப்படை தகவல்களையும், அதில் பாதுகாப்பாக இருப்பது குறித்தும் தெரிந்துகொள்ளுங்கள்.
இப்போதெல்லாம் ஸ்மார்ட்போன்களில் ஸ்கிரீன் ரெக்கார்டு அம்சம் பொதுவானதாகிவிட்டது. இந்த அம்சம் பல நேரங்களில் நமக்கு பயனுள்ளதாக இருக்கும், ஆனால் நமக்குத் தெரியாமல் யாராவது நம் திரையைப் பதிவு செய்தால் அது நமது பிரைவசிக்கு அச்சுறுத்தலாக மாறும். இதுபோன்ற சூழ்நிலையில், நமது தொலைபேசியின் ஸ்கிரீன் எப்போது, எப்படிப் பதிவு செய்யப்படுகிறது என்பதை அறிந்து கொள்வது அவசியம்.
வழக்கமாக, உங்கள் ஸ்மார்ட்போனில் ஸ்கிரீன் ரெக்கார்டிங் இயக்கப்பட்டிருக்கும் போது, உங்கள் ஸ்கிரீனில் சிவப்பு கலரில் டைமர் ஓடுவதை காண்பீர்கள். இந்த நோட்டிபிகேஷன் உங்கள் திரையில் செயல்பாடு பதிவு செய்யப்படுவதை எச்சரிக்கிறது. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் திரைப் பதிவு தொடங்கும் போது, நோடிபிகேஷன் ஸ்கிரீனில் மேற்புறத்தில் ஒரு சிறிய ஐகான் அடிக்கடி தோன்றும். இந்த ஐகான் பொதுவாக ஒரு கேமரா போல் இருக்கும். திரைப் பதிவு நடைபெறும் வரை இந்த ஐகான் திரையில் இருக்கும்.
உங்கள் தொலைபேசித் திரையில் திடீரென்று கேமரா போன்ற ஐகானைக் கண்டால், அதுவும் ஸ்கிரீன் ரெக்கார்டரை நீங்களே தொடங்கவில்லை என்றால், அது வேறு யாரோ உங்கள் திரையைப் பதிவு செய்கிறார்கள் என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். இது ஸ்கிரீன் ரெக்கார்டு உங்கள் மொபைலில் அனுமதி வழங்கப்பட்ட செயலிகளின் (Mobile Apps) வழியாக ஊடுருவிய Malware காரணமாக இருக்கலாம்.
அத்தகைய சூழ்நிலையில், எந்த செயலி பின்னணியில் இயங்குகிறது மற்றும் திரையைப் பதிவுசெய்கிறது என்பதை உடனடியாகச் சரிபார்க்கவும். உங்கள் தொலைபேசியின் செயலிப் பட்டியலைச் சரிபார்த்து, நீங்கள் பதிவிறக்காத செயலிகள் ஏதேனும் உள்ளதா என்று பார்க்கவும். இதுபோன்ற ஏதேனும் செயலியை நீங்கள் கண்டால், உடனடியாக அதை அன்இன்ஸ்டால் செய்யவும். மேலும், செயலி அனுமதிகளை மதிப்பாய்வு செய்து, எந்தெந்வொரு செயலியும் திரையைப் பதிவுசெய்ய அனுமதிகொடுக்காதீர்கள். இதுபோன்ற விஷயங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.