புதுடெல்லி: ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை தொடர்பான புதிய வீடியோவை இந்திய ராணுவம் நேற்று வெளியிட்டது. கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.
இதற்கு பதிலடியாக கடந்த 7-ம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்களை இந்திய விமானப் படை ஏவுகணைகளை வீசி அழித்தது. அப்போது தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது தொடர்பான செயற்கைக்கோள் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிடப்பட்டன.
இதைத் தொடர்ந்து கடந்த 7, 8, 9, 10 ஆகிய தேதிகளில் இந்தியா, பாகிஸ்தான் இடையே அதிதீவிரமான போர் நடைபெற்றது. கடந்த 9-ம் தேதி நள்ளிரவில் பாகிஸ்தானின் 11 விமான படைத் தளங்களை இந்திய விமானப் படை பிரம்மோஸ், ஸ்கால்ப் ஏவுகணைகள் மூலம் அழித்தது.
இந்திய ராணுவம், விமான படையின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் கடந்த 10-ம் தேதி பாகிஸ்தான் ராணுவம் பணிந்தது. அன்றைய தினம் இரு நாடுகளிடையே சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்தது.
இந்த சூழலில் ஹரியானாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்திய ராணுவத்தின் மேற்கு பிராந்திய தலைமை, ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான புதிய வீடியோவை நேற்று வெளியிட்டது. கடந்த 9-ம் தேதி எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவம் மீது இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்திய காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றிருக்கிறது.
அந்த வீடியோவில் இந்திய ராணுவ வீரர்கள் கூறியிருப்பதாவது: பஹல்காம் தீவிரவாத தாக்குதலால் இந்தியா எரிமலையாக வெடித்தது. இந்த தாக்குதலுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும். அந்த பாடம் பல்வேறு தலைமுறை நினைவுகூரக்கூடியதாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.
இதற்காகவே ஆபரேஷன் செந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது பழிவாங்கல் கிடையாது. நீதியை நிலைநாட்டும் நடவடிக்கை ஆகும். இதன்மூலம் பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் கற்பிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு இந்திய ராணுவ வீரர்கள் தெரிவித்துள்ளனர்.