கடலூர்: கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் பலத்த மழை பெய்ததில் குறுவை பயிரிட்ட 250 ஏக்கர் அளவிலான விளைநிலங்கள் மழை தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம், குறிஞ்சிப்பாடி, லால்பேட்டை, வேப்பூர், பண்ருட்டி, அண்ணாமலைநகர், விருத்தாசலம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
இதனால் சாலைகளில் மழை தண்ணீர் ஆறு போல ஓடியது, தாழ்வான இடங்களில் மழை தண்ணீர் தேங்கி நின்றது. இந்த மழையால் ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளில் கூடலையாத்தூர், முடிகண்டநல்லூர்,கானூர், பேரூர், காவாலகுடி, மழவராயநல்லூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் குறுவை பருவ நெல் நடவு செய்யப்பட்ட வயல்கள் சுமார் 250 ஏக்கர் மழை தண்ணீரில் மூழ்கியுள்ளது.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில் சரியான வடிகால் வசதி இல்லாததால் மழை தண்ணீர் வடியாமல் விளைநிலங்கள் மூழ்கியுள்ளன.
கடன் வாங்கி போர்வெல்லில் குறுவை விவசாயம் செய்துள்ளோம். தண்ணீர் தேங்கியுள்ளதால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது எங்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது என்றனர்.
மாவட்டத்தில் மழையளவு: அண்ணாமலை நகரில் 117 மிமீ, லால்பேட்டையில் 107 மிமீ, வேப்பூரில் 107 மிமீ, ஸ்ரீமுஷ்ணத்தில் 89.1 மிமீ, சிதம்பரத்தில் 85.8 மிமீ, விருத்தாசலத்தில் 76 மிமீ, காட்டுமன்னார்கோவிலில் 75.4 மிமீ, புவனகிரியில் 59 மிமீ, பரங்கிப்பேட்டையில் 55.4 மிமீ, சேத்தியாத்தோப்பில் 54 மிமீ, கடலூரில் 40 மிமீ, பண்ருட்டியில் 36 மிமீ, குறிஞ்சிப்பாடியில் 27 மிமீ மழை பெய்துள்ளது.
மாவட்டத்தில் பலத்த மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. வெப்பக்காற்றும் வீசியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வந்தனர். இந்த நிலையில் இந்த மழை மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.