புதுடெல்லி,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று இரவு டெல்லி அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நடந்த 60-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது. லோகேஷ் ராகுல் 112 ரன்களுடனும், டிரிஸ்டான் ஸ்டப்ஸ் 21 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
முன்னதாக கே.எல். ராகுல் பஞ்சாப் மற்றும் லக்னோ அணிக்காக விளையாடிய போதும் ஐ.பி.எல். தொடரில் சதம் அடித்துள்ளார்.
இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் 3 வெவ்வேறு அணிகளுக்காக சதம் அடித்த முதல் வீரர் என்ற மாபெரும் சாதனையை ராகுல் படைத்துள்ளார்.
இந்த ஆட்டத்தில் டெல்லி நிர்ணயித்த 200 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணி 19 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 205 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சாய் சுதர்சன் 108 ரன்களுடனும், கேப்டன் சுப்மன் கில் 93 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.