ரூ.1,000 கோடி முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் டாஸ்மாக் துணை மேலாளர் விசாரணைக்கு ஆஜரானார்.
சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தி்ல் அண்மையில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1.000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த 16-ம் தேதி சென்னை மணப்பாக்கம் சி.ஆர்.புரத்தில் உள்ள டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் வீடு, ஆழ்வார்பேட்டை கே.பி.தாசன் சாலையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு, எம்ஆர்சி நகரில் உள்ள தொழிலதிபர் ரித்தீஷ் வீடு உட்பட சென்னையில் 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 2 நாட்களாக நடைபெற்ற சோதனை 17-ம் தேதி நள்ளிரவு நிறைவடைந்தது.
சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சோதனை நடைபெற்ற 2 நாட்களும் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகனை அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். மேலும், தொழிலதிபர் தேவக்குமார், மின்வாரிய ஒப்பந்ததாரர் ராஜேஷ்குமார் ஆகியோரையும் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், டாஸ்மாக் துணை மேலாளர் ஜோதி சங்கரை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறையில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று காலை 11 மணிக்கு ஜோதி சங்கர் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் மதுபான ஒப்பந்தங்கள், காலி பாட்டில்கள் விற்பனை, வரவு செலவு விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
விசாரணை விவரங்கள் அனைத்தும் வாக்குமூலமாக பெறப்பட்டது. மேலும், வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டது. தேவைப்படும்போது மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கூறி அவரை அனுப்பி வைத்தனர்.