வயநாடு, கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கேரள அரசு ஆரஞ்சு அலர்ட்

திருவனந்தபுரம்: வடக்கு கேரளாவில் வயநாடு, காசர்கோடு, கண்ணூர் மற்றும் கோழிக்கோடு போன்ற மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பேரிடர் மீட்பு, வடிகால்களை சுத்தம் செய்தல் மற்றும் நிவாரண முகாம் போன்றவற்றை தயார் நிலையில் வைக்கவும் மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

இன்று (மே 19) கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக காசர்கோடு, கண்ணூர், வயநாடு மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வானிலை தொடர்பான அவசரநிலைகளை எதிர்கொள்ள மாநில அரசு முன்னேற்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளது.

முதல்வர் பினராயி விஜயனின் அலுவலகத்தில் நடைபெற்ற உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தில், பல்வேறு துறைகளின் பருவமழை தயார்நிலை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்துக்கு தலைமை தாங்கிய கேரள வருவாய்த்துறை அமைச்சர் கே.ராஜன், மே 20 ஆம் தேதிக்குள் பருவமழைக்கு முந்தைய அனைத்து பணிகளையும் அவசரமாக முடித்து, மாவட்ட அளவிலான திட்டமிடல் கூட்டங்களைக் கூட்டுமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தினார்.

“பருவமழை தொடர்பான பேரிடர்களை சமாளிக்க ஒவ்வொரு மாவட்டமும் ஒரு செயல் திட்டத்தை வகுக்க வேண்டும். மாவட்ட மற்றும் தாலுகா மட்டங்களில் மீட்பு அமைப்புகளை தாமதமின்றி செயல்படுத்த சரியான பயிற்சி அவசியம்.” என்று அமைச்சர் ராஜன் கூறினார்.

இதைத் தவிர, மழைநீர் தேங்குவதைத் தடுக்க, மழைக்காலத்துக்கு முந்தைய வடிகால்கள், மதகுகள் மற்றும் சிறிய கால்வாய்களை மழைக்காலத்திற்கு முன் சுத்தம் செய்யும் பணி உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். அபாயகரமான மரங்கள், தளர்வான விளம்பர போர்டுகள், மின் கம்பங்கள் போன்றவற்றை பாதுகாக்க வேண்டும். மழை தீவிரமடைவதற்கு முன்பு உள்ளாட்சி அமைப்புகள் விரைவான குப்பை அகற்றலை உறுதிசெய்து, பரந்த அளவிலான கொசு கட்டுப்பாட்டு முயற்சிகளைத் தொடங்க வேண்டும் என்றும் இந்தக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.