2025 ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. ஜூன் 3ஆம் தேதி இறுதி போட்டி நடைபெற உள்ளது. தற்போது குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. மீதமுள்ள ஒரு இடத்திற்கு போட்டி நிலவி வருகிறது.
இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் உள்ளன. ஆனால் இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி படுமோசமாக விளையாடி தொடரைவிட்டு வெளியேறி இருக்கிறது. இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் 3 வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. நேற்று கூட பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் ராஜஸ்தான் அணி தோல்வியை சந்தித்தது. ஆனால் வெறும் 10 ரன்கள் வித்தியாசத்திலேயே தோல்வி அடைந்தது.
இத்தொடரில் ராஜஸ்தான் அணி பல போட்டிகளை அப்படி தோற்றுள்ளது. இலக்கிற்கு நெருக்கமாக சென்று தோல்வியை தழுவியது. இந்த நிலையில், அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், தோல்விகளுக்கு காரணமே பந்துவீச்சாளர்கள்தான் என சுட்டிக்காட்டி பேசி உள்ளார். பேட்ஸ்மேன்களால் இந்த நிலை ஏற்படவில்லை. பந்து வீச்சாளர்களால் தான் இந்த நிலை என பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று (மே 18) பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான தோல்விக்கு பின்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, பேட்ஸ்மேன்களை மட்டும் குறை கூற முடியாது. அதனால் எந்த பயனும் இல்லை. இதற்கு பந்து வீச்சாளர்கள் தான் முக்கிய காரணம். உண்மையை சொல்ல வேண்டும் என்றால், இன்றைய போட்டியில் 220 ரன்கள் என்ற இலக்கு மிகவும் அதிகமான இலக்கு. 195 அல்லது 200 ரன்கள் தான் எடுத்திருக்க முடியும்
ஆனால், அதிகமாக 20 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளோம். இது மிகவும் கடினமான ஒன்று. இலக்கை நோக்கி நெருக்கமாக வந்தோம். ஆனால் எங்களால் வெற்றிகரமாக முடிக்க முடியவில்லை. நாங்கள் இந்த தொடர் முழுவது இதுபோன்ற தவறுகளையே செய்துள்ளோம். 15, 20 ரன்கள் கூடுதலாக விட்டுக்கொடுத்தோம் என நினைக்கிறேன். பல போட்டிகளில் மிக நெருக்கமாக சென்று தோற்றோம். லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களால் பெரிய ஷாட்களை அடிக்க முடியவில்லை.
அதேசமயம் நாங்கள் அதிக விக்கெட்களை இழந்து தடுமாறினோம் என சொல்லிவிட முடியாது. இன்றைய போட்டியில் கூட 5 விக்கெட்களை தான் இழந்திருந்தோம். ஆனாலும் வெற்றிகரமாக முடிக்க முடியவில்லை என அவர் தெரிவித்தார்.
மேலும் படிங்க: அசிங்கத்தை போக்க CSK இதை செய்யணும்… பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்?
மேலும் படிங்க: IPL 2025: அதிக முறை பிளே ஆஃப் சென்ற அணிகள்.. லிஸ்ட் இதோ!