அட்டாரி: போர் பதற்றம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்திய – பாகிஸ்தான் எல்லைகளின் மூன்று நிலைகளில் நடத்தப்படும் கொடியிறக்க நிகழ்வு (Retreat ceremony) இன்று மாலை முதல் மீண்டும் தொடங்கும் எனவும், நாளை முதல் பொதுமக்கள் இதனைக் காண அனுமதிக்கப்படுவர் என்றும் எல்லைப் பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.
பஞ்சாப்பின் ஜலந்தர் நகரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் எல்லைப் பாதுகாப்புப் படைப்பிரிவு, “இந்த பின்வாங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை மாலை முதல் மீண்டும் நடைபெறும். இன்று ஊடகங்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. நாளை முதல் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும். நிகழ்வு மாலை 6 மணிக்கு நடைபெறும்” என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக அதிகாரிகள் திங்கள்கிழமை கூறும்போது, “அட்டாரி, ஹுசைனிவாலா மற்றும் சாட்கி எல்லைகளில் தினமும் மாலையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை செவ்வாய்க்கிழமை முதல் பொதுமக்கள் பார்வையிடலாம். என்றாலும் பாகிஸ்தான் வீரர்களுடன், இந்திய எல்லைப் பாதுகாப்புப் படைவீரர்கள் கைகுலுக்க மாட்டார்கள். கொடி இறக்கப்படும் போது முன்பு அறிவிக்கப்பட்டது போல் வாயில்கள் திறந்திருக்காது” என்று தெரிவித்திருந்தனர்.
ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, ஏப்.7-ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் நிலைகளைத் தாக்கியது.
இதனைத் தொடர்ந்து பொதுபாதுகாப்பு கருதி இந்தியா – பாகிஸ்தான் எல்லைகளின் மூன்று நிலைகளில் நடத்தப்படும் இந்த பின்வாங்கும் நிகழ்வைக் காண பொதுமக்களுக்கான அனுமதியை மே 8-ம் தேதி முதல் எல்லைப்பாதுகாப்புப்படை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.