வாஷிங்டன்,
அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு, நாட்டில் வசித்து வரும் வெளிநாட்டவர்களின் பல்வேறு உரிமைகள், சலுகைகள் பறிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், விசா முடிந்தும் வெளியேறாவிட்டால் நாடு கடத்தப்படுவீர்கள் என இந்தியர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி விசா காலத்தை விட அதிகமாக தங்கியிருப்பது நாடுகடத்தலுக்கும், விசா முடிந்தும் வெளியேறாத இந்தியர்களுக்கு மீண்டும் அமெரிக்காவுக்கு வர நிரந்தர தடை விதிக்கப்படும் என்றும் அமெரிக்கா அரசு எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது எக்ஸ் வலைதளத்தில், “நீங்கள் (இந்தியர்கள்) அனுமதிக்கப்பட்ட தங்கியிருக்கும் காலத்திற்குப் பிறகும் அமெரிக்காவில் தங்கினால், நீங்கள் நாடு கடத்தப்படலாம், மேலும் எதிர்காலத்தில் அமெரிக்காவுக்கு பயணம் செய்வதற்கு நிரந்தரத் தடையை எதிர்கொள்ள நேரிடும்” என்று பதிவிட்டுள்ளது.
அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக சுமார் 4.78 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் பணியாற்றி வரும்நிலையில், டிரம்பின் இந்த புதிய அறிவிப்பால் அங்கு வசித்து வரும் 45 லட்சம் இந்தியர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.