"என் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த முயன்றவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" – சாம் சி.எஸ்

இசையமைப்பாளர் சாம் சி.எஸ் மீது திரைப்பட தயாரிப்பாளர் சமீர் அலிகான் மோசடி புகார் அளித்திருப்பதாக இன்று காலை செய்தி வெளியானது. ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’ படத்திற்கு இசையமைக்க பணத்தைப் பெற்றுக் கொண்டு சாம் சி.எஸ். ஏமாற்றிவிட்டதாக கோயம்பேடு காவல் நிலையத்தில் சமீர் அலிகான் புகார் அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.

Sam CS
Sam CS

இந்நிலையில் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் புகாரளிக்கப்பட்ட காவல் நிலையத்திலிருந்து எந்தவொரு அழைப்பாணையும் தனக்கு கிடைக்கப் பெறவில்லை எனக் கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக சாம் சி.எஸ். வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கடந்த 2020-ம் ஆண்டில் தயாரிப்பாளர் திரு. சமீர் அலிகான் என்பவர் தான் தயாரிக்க இருக்கும் தமிழ் திரைப்படமான ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’ என்ற தலைப்புக் கொண்ட படத்திற்கு இசையமைக்க என்னை ஒப்பந்தம் செய்தார். அதன் பிறகு இத்தனை ஆண்டுகள் தொடர்பில்லாமல் இருந்த திரு. சமீர் அலிகான் அவர்கள், திடீரென முழுப் படத்தையும் எடுத்து முடித்துவிட்டதாக வாய்மொழியாகச் சொல்லி, என்னிடம் இசையமைக்கச் சொல்லிக் கேட்டார். ஆனால், இதற்கு முன் ஒப்பந்தம் செய்த திரைப்படங்களின் பணிகள் நடந்து கொண்டிருப்பதால், காலதாமதம் ஆகும் என்ற நிலவரத்தை அவரிடம் எடுத்துக் கூறினேன்.

Sam CS
Sam CS

தான் காத்திருப்பதாகச் சொல்லிவிட்டுச் சென்ற திரு. சமீர் அலிகான் அவர்கள், கோயம்பேடு காவல் நிலையத்தில் என் மீது புகார் அளித்திருந்தார். அதற்கான எனது தரப்பு விளக்கங்கள் ஆதாரத்தோடு கொடுக்கப்பட்டன. இனி காவல் நிலையத்தால் தான் நினைத்தது நடக்காது என்று உணர்ந்த திரு. சமீர் அலிகான் அவர்கள், மீண்டும் தயாரிப்பாளர் சங்கத்தை அணுகி புகார் அளித்தார். அங்கு திரு. கதிரேசன் (செயலாளர்) அவர்கள் முன்னிலையிலும், இசையமைப்பாளர் சங்க நிர்வாகிகள் முன்னிலையிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டுவிட்டு, தயாரிப்பாளரின் நிலைமையை மனதில் கொண்டும், நிர்வாகிகளின் ஆலோசனைப்படியும், ஏற்கனவே மேற்படி திரைப்படம் சம்பந்தப்பட்ட சில பாடல்களுக்கு நான் இசையமைத்துக் கொடுத்திருந்தாலும், அதனையெல்லாம் பொருட்படுத்தாமல், நான் வாங்கிய முன்பணத்தை நானே திருப்பிக் கொடுக்க முடிவு செய்தேன்.

அதற்கு திரு. சமீர் அலிகான் அவர்கள் யோசனை செய்துவிட்டுச் சொல்வதாகக் கூறிச் சென்றார். இந்நிலையில், தற்போது திரு. சமீர் அலிகான் என்பவர் கோயம்பேடு காவல் நிலையத்தில் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். மீது ஏதோ மோசடி புகார் அளித்துள்ளார் என்று பல்வேறு ஊடகங்களிலும் இன்று செய்தி வந்திருப்பதை அறிந்து, இந்த விளக்கத்தை அளிக்க நான் கடமைப்பட்டுள்ளேன். சமீர் அலிகான் என்பவர் எனக்கு எதிராகக் கொடுத்துள்ளதாகச் சொல்லப்படும் புகார் குறித்து, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலிருந்து எனக்கு இதுவரை அழைப்பாணை எதுவும் கிடைக்கப் பெறவில்லை என்பதையும், அவ்வாறான அழைப்பாணை கிடைக்கப் பெற்றதும், அந்தப் புகாரில் என்னைப் பற்றி என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை முழுவதும் அறிந்துகொண்டு, எனது விளக்கத்தை காவல்துறைக்கும், தேவையான நேரத்தில் ஊடகங்களுக்கும் வழங்கப்படும் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

Sam CS
Sam CS

அதே நேரத்தில், மேற்படி சமீர் அலிகான் என்பவர் மீது மட்டுமல்லாமல், அவருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவி செய்து, அவதூறு செய்திகள் மூலம் என் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த முயன்றுள்ள அனைவர் மீதும், தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.