சென்னை,
ஐ.பி.எல். தொடரில் டெல்லியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவரில் 187 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 188 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் 17.1 ஓவரில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 188 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நேற்றைய ஆட்டத்தில் தோனி 17 பந்தில் 16 ரன் எடுத்து அவுட் ஆனார். கடந்த காலங்களை போல அதிரடியாக ஆட முடியாமல் தடுமாறும் தோனி ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வை அறிவிக்க வேண்டும் என கருத்துகள் வலுத்து வருகின்றன. இந்நிலையில், இது தொடர்பாக இந்திய முன்னாள் வீரரான ஸ்ரீகாந்த் கூறியதாவது,
தோனிக்கு வயதாகிவிட்டது. அவரிடமிருந்து நாம் அதிகம் எதிர்பார்க்க முடியாது. அதே நேரத்தில் நீங்கள் தொடர்ந்து விளையாட வந்து நிலைமையை குழப்பவும் கூடாது. உங்களால் செய்ய முடியாது என்றால் முடியாது என்று சொல்லிவிட்டு விலகிச் செல்லுங்கள். இந்த அழைப்பை தோனி மட்டுமே எடுக்க முடியும். அவர் தொடர்ந்து விளையாடினால் கேப்டன் விக்கெட் கீப்பர், பினிஷர், எந்த ரோலில் விளையாடுவார்?.
நியாயமாகச் சொன்னால் அவருடைய அனிச்சை குறைந்துவிட்டது. அவருடைய முழங்கால்கள் தளர்ந்து இருக்கலாம். வயதாகின்ற காரணத்தினால் இதுவெல்லாம் இயல்பாகவே நடக்கும். இப்படியான நிலையில் சி.எஸ்.கே அணியின் டாப் ஆர்டரும் தொடர்ந்து ஏமாற்றி வருகிறது.
சி.எஸ்.கே அணியின் இன்றைய பிரச்சனை என்னவென்றால் தோனியால் அவரது வேலையை சரியாக செய்ய முடியவில்லை. மீண்டும் மீண்டும் சுழற் பந்துவீச்சாளர்கள் அவரைக் கட்டி போடுகிறார்கள். ஒரு காலத்தில் அவர்களை அவர் ஸ்டாண்டுக்கு வெளியில் அடிப்பார். நியாயமாகச் சொன்னால் தோனி போராடி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.