கூட்டாட்சி விதிமுறைகளையும், அனைத்து வரம்புகளையும் அமலாக்க துறை மீறியுள்ளது: உச்ச நீதிமன்றம் கண்டனம் – முழு விவரம்

புதுடெல்லி: டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்தியதன்மூலம் கூட்டாட்சி விதிமுறைகளையும், அனைத்து வரம்புகளையும் அமலாக்க துறை மீறிவிட்டதாக கண்டனம் தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், அமலாக்க துறை விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற விடுமுறைக்கு பிறகு அமலாக்க துறை இதுகுறித்து பதில் அளிக்கவும் உத்தரவிட்டது.

டாஸ்மாக் மூலம் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெறுவதாக கூறி, சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலை அதிபர்களின் வீடுகளில் அமலாக்க துறை சோதனை நடத்தியது. டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாகவும் குற்றம்சாட்டியது.

டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் வீடு உட்பட பல்வேறு இடங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. டாஸ்மாக் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி வரவழைத்து தீவிர விசாரணையும் நடத்தி வந்தது. இதற்கிடையே, அமலாக்க துறையின் விசாரணையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்செய்தது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம், அமலாக்க துறை தொடர்ந்து விசாரணை நடத்த அனுமதி அளித்தது.

இதை தொடர்ந்து, தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி ஏ.ஜி.மாசி அமர்வில் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதம்:

தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல்,அமித் திவாரி, முகுல் ரோஹ்தகி: கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து மதுபான கடைகளுக்கான உரிமம் ஒதுக்கீடு தொடர்பாக மாநில அரசே 40-க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்துள்ளது. ஆனால், டாஸ்மாக் நிறுவனத்திலேயே அமலாக்க துறை சோதனை நடத்தியுள்ளது. அதிகாரிகளின் செல்போன்களை பறிமுதல் செய்து நகல் எடுத்துள்ளனர். இது அவர்களது தனிப்பட்ட உரிமைகளை மீறிய செயல்.

நீதிபதிகள்: கூட்டாட்சி விதிமுறைகளை அமலாக்க துறை மீறியுள்ளது. தனி நபர்கள் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதற்கு, அரசு நிறுவனமான டாஸ்மாக்கில், அமலாக்க துறை எப்படி சோதனை நடத்தலாம்? அனைத்து வரம்புகளையும் அமலாக்க துறை மீறியுள்ளது.

அமலாக்க துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜு: இந்த வழக்கு ரூ.1,000 கோடிக்கு மேலான ஊழல் விவகாரம். இதில் அமலாக்க துறை வரம்பு மீறி செயல்படவில்லை.

நீதிபதிகள்: இதுகுறித்து நீதிமன்ற விடுமுறைக்கு பிறகு அமலாக்க துறை பதில் அளிக்க வேண்டும். அமலாக்க துறை விசாரணைக்கு தடை விதிக்கப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதுகுறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி கூறும்போது, ‘‘உச்ச நீதிமன்ற உத்தரவை வரவேற்கிறோம். திமுக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் பாஜகவின் முயற்சிகளுக்கு மிகப் பெரிய அடி விழுந்துள்ளது. இனிமேல் அமலாக்க துறையை தவறாக பயன்படுத்துவதை மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்’’ என்றார்.

41 வழக்கின் நிலை அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய உத்தரவு: டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 41 வழக்குகளின் நிலை அறிக்கைகளை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக கடந்த 2017-2024 காலகட்டத்தில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸார் பதிவு செய்த 41 வழக்குகளின் அடிப்படையில் சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் மத்திய அமலாக்க துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் உட்பட பல்வேறு இடங்களில் கடந்த மார்ச் மாதம் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், டாஸ்மாக் நிறுவனம் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறை பதிவு செய்துள்ள வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரி, பாளையங்கோட்டை வழக்கறிஞர் வெங்கடாசலபதி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதம்:

தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன்: வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றுவது தொடர்பான வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வாதங்களையும் கேட்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

41 வழக்குகளிலும் டாஸ்மாக் நிர்வாகம் தான் புகார்தாரர் என்பதால், குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள், அலுவலர்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்க வேண்டும்.

நீதிபதிகள்: அவர்களை எதிர்மனுதாரராக சேர்க்கும்வரை இந்த வழக்குகள் முடிக்கப்படாது என உத்தரவாதம் அளிக்கப்படுமா?

தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன்: வழக்கை முடித்து வைப்பது தொடர்பாக கீழமை நீதிமன்றம்தான் முடிவு எடுக்க முடியும். எனினும், அடுத்த விசாரணை வரை வழக்குகளை முடித்து வைக்குமாறு கோர வேண்டாம் என உள்துறை செயலருக்கு அறிவுறுத்தப்படும்.

நீதிபதிகள்: அதை பதிவு செய்துகொள்கிறோம். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை எதிர்மனுதாரராக சேர்க்க மனுதாரருக்கு 3 வாரம் அவகாசம் வழங்கப்படுகிறது. டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 41 வழக்குகளின் நிலை அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 3 வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.