சென்னை, மும்பை, அகமதாபாத்தில் கரோனா தொற்று: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பு

புதுடெல்லி: ஹாங்காங், சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவின் மும்பை, சென்னை மற்றும் அகமதாபாத் உள்ளிட்ட நகங்களிலும் கரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. எனினும், முந்தைய கரோனா அலையுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு ஆகும்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 106 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக மும்பையில் மே மாதத்தில் மட்டும் 95 பேர் பாதிக்கப்பட்டனர். 16 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா பரவலைத் தடுக்க, காய்ச்சல் அறிகுறி உள்ள அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாட்டில் 12 பேருக்கு புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இன்ப்ளூயன்சாவால் ஏற்பட்டதாகக் கூறப்படும் காய்ச்சலுக்கு கரோனா தொற்றுடன் தொடர்பு இருப்பது அதிகரித்து வருகிறது. தொற்று அபாயம் அதிகரித்துள்ளதால், சில மருத்துவமனைகள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் இதய அறுவை சிகிச்சை உள்ளிட்ட முக்கிய சிகிச்சைகளை தாமதப்படுத்தி உள்ளன.

சென்னையில் உள்ள கிளென்ஈகிள்ஸ் ஹெல்த்சிட்டியின் தொற்று நோய் நிபுணர் டாக்டர் சுப்ரமணியம் சுவாமிநாதன் கூறும்போது, “வைரஸ் பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கு கரோனா தொற்று இருப்பது அதிகரித்து வருகிறது” என்றார்.

பொது சுகாதார இயக்குநர் டாக்டர் டி.எஸ்.செல்வ விநாயகம் கூறும்போது, “மக்கள் நெருக்கம் உள்ள பகுதிகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆனால் பீதி அடையத் தேவையில்லை. கரோனா தொற்று முற்றிலும் மறைந்துவிடவில்லை. பருவ காலங்களில் குறைந்த அளவில் பரவி வருகிறது” என்றார்.

கர்நாடகாவில் 16 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் கடந்த ஓரிரூ ஆண்டாக, மாதத்துக்கு ஒருவர் மட்டுமே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், அகமதாபாத்தில் ஒரே நாளில் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கரோனா தொற்று பரவல் முடிவுக்கு வந்துவிட்டதாக உலக சுகாதார அமைப்பு கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் அறிவித்தது. ஆனாலும், உலகம் முழுவதும் கரோனா பரவி வருகிறது. இந்தியாவில் கரோனா பாதிப்பு சிறிய அளவில் இருந்து வருகிறது. இந்த தொற்றால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகள், உடல்நல பாதிப்பு உள்ளவர்கள் கரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வழக்கம்போல முகக்கவசம் அணிவது மற்றும் அவ்வப்போது சோப்பு போட்டு கைகளை கழுவுவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கையை கடைபிடிக்க வேண்டும் என சுகாதார துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.