பலானா: ஆபரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தானை இந்திய ராணுவம் மண்டியிட வைத்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானின் தேஷ்நோக் அருகில் உள்ள பலானா பகுதியில் நேற்று அரசு நலத்திட்ட விழா நடைபெற்றது. இதில், ரூ.26,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்குக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். சில திட்டங்களை தொடங்கிவைத்தார்.
விழாவில் அவர் பேசியதாவது: கடந்த ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். நமது சகோதரிகளின் குங்குமத்தை பறித்தனர். தீவிரவாதிகளின் குண்டுகள் பாய்ந்தது சுற்றுலா பயணிகள் மீதுமட்டுமல்ல. 140 கோடி இந்தியர்களின் இதயங்களையும் அது துளைத்தது. தீவிரவாதிகளுக்கு எதிராக ஒட்டுமொத்த இந்தியாவும் ஒன்றுதிரண்டது. இதைத் தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முப்படைகளுக்கும் மத்திய அரசு முழு சுதந்திரம் வழங்கியது. கடந்த 7-ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை மூலமாக, பாகிஸ்தானில் செயல்பட்ட 9 தீவிரவாத முகாம்கள் 22 நிமிடங்களில் அழிக்கப்பட்டன.
இதன்பிறகு நடைபெற்ற போரில் இந்தியாவின் முப்படைகளும் பாகிஸ்தானை மண்டியிட வைத்தன.நமது பெண்களின் குங்குமத்தை அழித்தவர்கள் இன்று மண்ணோடு மண்ணாகிவிட்டனர். பாகிஸ்தான் தீவிரவாதிகள் தற்போது தங்கள் உயிரை காப்பாற்ற பதுங்கும் இடங்களை தேடி ஓடுகின்றனர். தீவிரவாதிகளின் தலைமையகங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. ஆபரேஷன் சிந்தூர் மூலம் புது வகையான நீதி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வலிமையான இந்தியாவின் ருத்ர தாண்டவம் வெளிப்பட்டுள்ளது. இது புதிய இந்தியா. இது எதிரிகளின் இதயத்தின் மீதே நேரடியாக தாக்குதல் நடத்தும்.
ஆபரேஷன் சிந்தூர் மூலம் தீவிரவாதத்தை எதிர்கொள்ள 3 கொள்கைகளை இந்தியா வரையறுத்துள்ளது. இந்தியாமீது தாக்குதல் நடத்தப்பட்டால், மிககடுமையான பதிலடி தரப்படும். எதிரிகளின் அணு ஆயுத மிரட்டல்களுக்கு ஒருபோதும் அஞ்ச மாட்டோம். தீவிரவாதிகளையும், தீவிரவாதத்தை ஆதரிக்கும் அரசையும் ஒரே பாணியில் அணுகுவோம். இவையே அந்த கொள்கைகள். பாகிஸ்தானின் இரட்டை வேட நாடகம் இனிமேலும் எடுபடாது. பாகிஸ்தானுடன் இனிமேல் வர்த்தகம் கிடையாது. பேச்சுவார்த்தையும் கிடையாது. பேச்சு நடத்துவதானாலும், ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டும்தான்.
இனிமேலும் இந்தியாவுக்குள் தீவிரவாதிகளை அனுப்ப பாகிஸ்தான் முயற்சி செய்தால் அந்த நாடு யாசகம் வாங்கும் சூழலுக்கு தள்ளப்படும். இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டால் பாகிஸ்தான் மிக மோசமான விளைவுகளை சந்திக்கும். உலகின் எந்த சக்தியாலும் இந்தியாவை தடுத்து நிறுத்த முடியாது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.