பொதுவான சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் நவம்பரில் விண்ணப்பிக்க தவெக முடிவு

பொதுவான சின்னம் கேட்டு வரும் நவம்பர் மாதம் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்க தவெக முடிவு செய்துள்ளது.

நடிகர் விஜய் தொடங்கி உள்ள தமிழக வெற்றிக் கழகம் 2026 தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருக்கும் நிலையில் தேர்தலுக்கு முன்பாக பொதுவான சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்க தவெக முடிவு செய்துள்ளது. குறிப்பாக, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் தேர்தலின் போது தங்களது கட்சி சின்னத்தில் போட்டியிடுவார்கள்.

பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கும், சுயேச்சை வேட்பாளர்களுக்கும் தேர்தலின் போது தேர்தல் ஆணையம் தான் சின்னத்தை ஒதுக்குகிறது. மேலும், 234 தொகுதிகளிலும் 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் போது தேர்தல் ஆணையம் பொது சின்னம் வழங்குகிறது. அந்தவகையில், தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சியாக தான் இருக்கிறது. வரும் 2026 சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், வரும் நவம்பர் மாதம் 11-ம் தேதிமுதல் பொது சின்னம் கேட்டு விண்ணப்பிக்க, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், பொதுவான சின்னம் கேட்டு வரும் நவம்பர் மாதம் விண்ணப்பிக்க தவெக தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திமுகவுக்கு உதயசூரியன், அதிமுகவுக்கு இரட்டை இலை, காங்கிரஸ் கட்சிக்கு கை, பாஜகவுக்கு தாமரை, நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் இருப்பது போல, தவெகவுக்கு தனித்துவமாகவும், மக்கள் எளிதாக நினைவில் கொள்ளும் வகையிலும் சின்னத்தை பெறுவதில் கட்சியின் தலைவர் விஜய் உறுதியாக இருக்கிறார்.

இதையொட்டி, தவெக தலைவர் விஜய் தேர்தல் சின்னத்தை தேர்வு செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். அந்தவகையில், அரசியல் கட்சிகள் தேர்வு செய்வதற்காக தேர்தல் ஆணையம் சார்பில் ஒதுக்கப்பட்டுள்ள 190 சின்னங்களில், கிரிக்கெட் மட்டை, மோதிரம், வைரம், விசில், மைக், ஹாக்கி மட்டை மற்றும் பந்து போன்ற சின்னங்கள் தவெகவின் விருப்ப பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது.

தேர்வு செய்யப்படும் சின்னம் மக்களின் உணர்வு பூர்வமாக இருக்க வேண்டும், அவர்களிடம் எளிதாக கொண்டு செல்லும் வகையில் இருக்க வேண்டும், விஜய் நடித்த படங்களுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும் என்பதில் கட்சி தலைமை கவனமாக இருக்கிறது. அதன்படி, தேர்தலுக்கான பொது சின்னத்தை தேர்வு செய்வதில், அனைத்து மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி விரைவில் சின்னம் முடிவு செய்யப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.