மேட்டூர்: மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு ஜுன் 12-ம் தேதி முதல்வர் தண்ணீர் திறந்து வைக்கிறார். இதனையொட்டி, மேட்டூர் அணையில் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி இன்று (மே 22) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும். நடப்பாண்டில் அணையில் நீர் இருப்பு திருப்திகரமாக இருப்பதால் குறித்த நாளான ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ளார். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிடடவை குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி இன்று (மே 22) ஆய்வு செய்தார்.
அப்போது, மேட்டூர் அணையின் வலது கரையில் மேடை அமைக்கப்பட உள்ள இடம், மேல்மட்ட மதகில் மின் விசையை இயக்கும் இடம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தார். தொடர்ந்து, நீர்வளத்துறை அதிகாரிகளிடம் நீர்வரத்து, நீர் வெளியேற்றம், பாசனத்துக்கு நீர் திறப்பு உள்ளிடவைகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது, நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் செல்வராஜ், கோட்டாட்சியர் சுகுமார், வட்டாட்சியர் ரமேஷ், டிஎஸ்பி ஆரோக்கியராஜ், உதவி பொறியாளர் சதிஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
நீர்வரத்து அதிகரிப்பு: காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த 7 நாட்களாக அதிகரித்து வருகிறது. அதன்படி, அணைக்கு நேற்று (மே 21) விநாடிக்கு 12,819 கன அடியாக இருந்த நிலையில் இன்று (மே 22) விநாடிக்கு 13,606 கன அடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110.03 அடியில் இருந்து, இன்று 110.77 அடியாக உயர்ந்துள்ளது.
அணையின் நீர் இருப்பு 78.45 டிஎம்சியிலிருந்து, இன்று 79.60 டிஎம்சியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை விட, நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அணையின் முழு கொள்ளளாவான 120 அடியை எட்ட இன்னும் 9 அடி தான் உள்ளது.