வேலூர்: ஆபத்தைச் சுட்டிக்காட்டிய விகடன்… மின் கம்பத்தை விரைந்து சீரமைத்த அதிகாரிகள்!

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம் பகுதியில் அமைந்துள்ளது, மேலரசம்பட்டு கிராமம். வேலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாகவே இரவு நேரத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மே 20 ஆம் தேதி இரவு பெய்த கனமழையின் காரணமாக மேலரசம்பட்டு பகுதியில் சாலையின் ஓரத்தில் இருந்த மின் கம்பம் சேதம் அடைந்தது. இதனால் இப்பகுதியில் இரவு நேரத்தில் மின்வெட்டும் ஏற்பட்டு இருந்தது. சேதம் அடைந்த மின் கம்பம் குறித்து விகடன் தளத்தில் நேற்று செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. அதில் “பொது மக்களுக்கு அசம்பாவிதம் ஏதும் ஏற்படுவதற்கு முன்பே, சாய்ந்த நிலையில் இருக்கும் இந்த மின் கம்பத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும். மின் விநியோகத்தை சீராக வழங்க வேண்டும்” என்று பொது மக்கள் கோரிக்கை வைத்து இருந்தனர். 

இது குறித்து ஒடுகத்தூர் மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்ட பொழுது, “மேலரசம்பட்டில் சாய்ந்த நிலையில் இருக்கும் மின் கம்பம் குறித்து தற்போதுதான் தகவல் கிடைத்துள்ளது. சாய்ந்த நிலையில் இருக்கும் மின்கம்பத்தை உடனடியாக சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறி இருந்தனர்.

விகடன் செய்தி எதிரொலியாக இன்று மின் வாரிய அலுவலர்கள் சேதமடைந்த மின் கம்பத்தை அகற்றி புதிய மின் கம்பத்தை நட்டு உள்ளனர். மேலும் சேதமடைந்த மின் கம்பம் சரி செய்யப்பட்டதால், மின் விநியோகம் சீராக வழங்கப்படாமல் இருந்த மேலரசம்பட்டு கிராமத்திற்கு தற்போது மின் விநியோகமும் சீராக வழங்கப்பட்டு வருகிறது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.