வாஷிங்டன்: அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள யூதர்கள் அருங்காட்சியகத்தில் யூதர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமெரிக்காவுக்கான இஸ்ரேல் தூதரக அதிகாரிகளும், ஊழியர்களும் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்து இரவு 9 மணிக்கு அனைவரும் அருங்காட்சியகத்தை விட்டு வெளியே வந்தனர்.
அப்போது இஸ்ரேல் தூதரக அதிகாரிகள், ஊழியர்களும் வெளியே வந்து வீட்டுக்குச் செல்ல ஆயத்தமாகி நின்றனர். அப்போது அருங்காட்சியகத்துக்கு வெளியே நின்ற மர்ம நபர் ஒருவர் தூதரக ஊழியர்களை நோக்கி ஓடிச் சென்று திடீரென்று குறிவைத்து துப்பாக்கியால் சுட்டார். இதில் சம்பவ இடத்திலேயே இஸ்ரேலிய தூதரக பெண் ஊழியர் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். இவர்கள் இருவருமே இஸ்ரேல் தூதரகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் ஆவர்.
அவர்களது பெயர் யாரோன் லிஷின்ஸ்கி மற்றும் சாரா மில்கிரிம் என்பது தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் காதலர்கள் என்று கூறப்படுகிறது. விரைவில் திருமணம் செய்ய இருந்த நிலையில் அவர்கள் 2 பேரும் இறந்துள்ளனர். அப்போது துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் அங்கிருந்து தப்பியோடவில்லை. அவரே, தன்னை போலீஸாரிடம் அழைத்துச் செல்லுங்கள் என்றார்.
இதையடுத்து அங்கு விரைந்த போலீஸார், அந்த நபரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். துப்பாக்கியால் சுட்ட நபர் கூறும்போது, “நான் இந்த சம்பவத்தை காசா பகுதி நலனுக்காக செய்தேன். காசா மக்களுக்காகத்தான் இதை செய்தேன். பாலஸ்தீனத்துக்கு விடுதலை வேண்டும். பாலஸ்தீனத்தை சுதந்திரமாக செயல்பட வைக்க வேண்டும்’’ என்றார்.
ட்ரம்ப் கண்டனம்: இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது எக்ஸ் தளத்தில் கூறும்போது, இந்த இரட்டைக் கொலைக்கு யூத விரோதம்தான் அடிப்படை காரணம். இந்தச் சம்பவத்தோடு இதற்கு முடிவு கட்டுவோம். வெறுப்பு மற்றும் தீவிரவாதத்துக்கு அமெரிக்காவில் இடமில்லை’ என்றார்.