புதுடெல்லி: இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தம் சர்வதேச மத்தியஸ்தத்தால், குறிப்பாக அமெரிக்காவின் செல்வாக்கால் ஏற்படவில்லை என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மீண்டும் திட்டவட்டமாக கூறினார். நெதர்லாந்து ஊடகம் ஒன்றுக்கு எஸ்.ஜெய்சங்கர் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. ஏனென்றால் அந்த நடவடிக்கையில் ஒரு தெளிவான செய்தி இருந்தது. ஏப்ரல் 22-ம் தேதி நாம் கண்டது போன்ற செயல்கள் (பஹல்காம் தாக்குதல்) நடந்தால், அதற்கு பதிலடி தரப்படும் என்பதுதான் அது. போர் நிறுத்த முயற்சி மே 10-ம் தேதி பாகிஸ்தான் ராணுவத்தால் தொடங்கப்பட்டது. போரை நிறுத்த தயாராக இருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் ஹாட்லைனில் கூறியது.
அதற்கு நாங்கள் எதிர்வினையாற்றினோம். போர் நிறுத்தம் முற்றிலும் இந்தியா – பாகிஸ்தான் பேச்சுவார்த்தையால் ஏற்பட்டது. சர்வதேச மத்தியஸ்தத்தால், குறிப்பாக அமெரிக்காவின் செல்வாக்கால் இது ஏற்படவில்லை.அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ என்னிடம் பேசினார். பிரதமர் மோடியிடம் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பேசினார். அவர்களின் பங்கு கவலை தெரிவிப்பதாக மட்டுமே இருந்தது.
அமரிக்கா மட்டுல்ல, எங்களிடம் பேசிய அனைத்து நாடுகளுடனும் ஒரு விஷயத்தை நாங்கள் தெளிவாக கூறினோம். பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்ய விரும்பினால் அதை அந்நாடு எங்களிடம் சொல்ல வேண்டும் என்பதுதான் அது. பாகிஸ்தான் ஜெனரல் நமது ராணுவ ஜெனரலை அழைத்து பேசிய பிறகே போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் தனது தலையீடு இருந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து கூறிவரும் நிலையில் அமைச்சர் ஜெய்சங்கர் அதனை மீண்டும் நிராகரித்துள்ளார்.