புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ராணுவ நடவடிக்கை விவகாரத்தில், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சரிந்துவிட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஜேஜே விளக்குவாரா: இந்தியா ஏன் பாகிஸ்தானுடன் இணை வைக்கப்படுகிறது? பாகிஸ்தானைக் கண்டிப்பதில் ஒரு நாடு கூட நம்மை ஆதரிக்கவில்லையே ஏன்? இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் “மத்தியஸ்தம்” செய்ய ட்ரம்பிடம் யார் கேட்டார்கள்?” என்று கேள்விகளை எழுப்பியுள்ளார். தொடர்ந்து, “இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சரிந்துவிட்டது” என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
முன்னதாக, நேற்று (மே 22) வெளியிட்ட பதிவில், இந்தியாவின் கவுரவம் குறித்த விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடி சமரசம் செய்து கொண்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டி இருந்தார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், “மோடிஜி, வெற்றுப் பேச்சுகளை நிறுத்துங்கள். எனக்கு இவற்றுக்கு பதில் கூறுங்கள்:
1. பயங்கரவாதம் குறித்த பாகிஸ்தானின் அறிக்கையை நீங்கள் நம்பியது ஏன்?
2. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு பணிந்து இந்தியாவின் நலன்களை ஏன் தியாகம் செய்தீர்கள்?
3. கேமராக்கள் முன்னால் மட்டுமே உங்கள் ரத்தம் கொதிப்பது ஏன்?
இந்தியாவின் கவுரவத்தை நீங்கள் சமரசம் செய்துவிட்டீர்கள்” என்று ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.