குற்ற வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை: ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏ பதவி பறிப்பு

ஜெய்ப்பூர்: அரசு அதிகாரியை நோக்கி துப்பாக்கியை நீட்டிய மிரட்டிய வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற கன்வர் லால் மீனாவின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜஸ்தான் சட்டமன்றம் ரத்து செய்தது.

சட்டமன்ற செயலகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, மே 1 முதல் கன்வர் லால் மீனாவின் உறுப்பினர் பதவி ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. சபாநாயகர் இந்த முடிவை எடுப்பதற்கு முன்பு அட்வகேட் ஜெனரல் மற்றும் மூத்த சட்ட நிபுணர்களிடமிருந்து சட்டக் கருத்தைக் கோரினார். ‘இன்று பெறப்பட்ட சட்டக் கருத்து அடிப்படையில், உச்ச நீதிமன்ற முன்னுதாரணங்களை மேற்கோள் காட்டி, எம்எல்ஏவின் தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைக்காததால், அவரது உறுப்பினர் பதவியை நீக்குவதைத் தவிர வேறு வழியில்லை’ என்று ராஜஸ்தான் சபாநாயகர் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

காலியிடம் குறித்து தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது, ​​அன்டா தொகுதியில் இடைத்தேர்தல் ஆறு மாதங்களுக்குள், அதாவது 2025 அக்டோபருக்கு முன்பு நடத்தப்படும். 200 இடங்களைக் கொண்ட ராஜஸ்தான் சட்டமன்றத்தில், பாஜக 118 எம்எல்ஏக்களையும், காங்கிரஸுக்கு 66 எம்எல்ஏக்களையும் கொண்டுள்ளது.

வழக்கு விவரம்: பிப்ரவரி 3, 2005 அன்று, ராஜஸ்தானில் மனோகர் தானா அருகே உள்ள கட்டகேடி கிராமத்தில் துணை சர்பஞ்ச் தேர்தலில் மறுவாக்குப் பதிவு நடத்தக் கோரி, அப்போதைய அக்லேரா நகர துணைப் பிரிவு அதிகாரி ராம் நிவாஸ் மேத்தாவை துப்பாக்கி முனையில் மிரட்டியதாக கன்வர் லால் மீனா மீது குற்றம்சாட்டப்பட்டது. கீழ் விசாரணை நீதிமன்றம் ஆரம்பத்தில் மீனாவை விடுவித்த போதிலும், அக்லேராவில் உள்ள கூடுதல் மாவட்ட நீதிபதி (ADJ) நீதிமன்றம் 2020 இல் அவரை குற்றவாளி என்று தீர்ப்பளித்து, அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்தது.

தன் மீதான தீர்ப்பை எதிர்த்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் கன்வர் லால் மீனா மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தார். இந்த ஆண்டு மே 2 அன்று அவரது மேல்முறையீட்டை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மீனா தனது தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகினார். இருப்பினும், உச்ச நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்து இரண்டு வாரங்களுக்குள் சரணடைய உத்தரவிட்டது. இதனையடுத்து மே 21 அன்று அக்லேரா நீதிமன்றத்தில் சரணடைந்த அவர் தற்போது சிறையில் உள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.