டெஸ்ட் அணிக்கு தேர்வான இளம் வீரர்கள்.. முகமது சமி, ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கம் ஏன்..? பி.சி.சி.ஐ. விளக்கம்

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூன்) இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20-ந்தேதி லீட்சில் தொடங்குகிறது.

4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2025-27) சுழற்சியில் இந்தியாவின் முதல் தொடர் இது என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான 17 பேர் கொண்ட இந்திய அணியை பி.சி.சி.ஐ. இன்று அறிவித்தது. இதன்படி இங்கிலாந்து செல்லும் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னணி நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மாவும், விராட் கோலிவும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், சுப்மன் கில் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய டெஸ்ட் அணி எவ்வாறு செயல்படப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்திய அணியில் அபிமன்யூ ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ்குமார் ரெட்டி, ஜடேஜா போன்ற வீரர்களும் இடம் பிடித்திருக்கிறார்கள். பவுலிங் படையில் பும்ரா, சிராஜ் , பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப் ஆகியோர் இடம் பிடித்திருக்கிறார்கள். சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவ், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் உள்ளனர்.

இதேபோன்று முதல் முறையாக இந்திய டெஸ்ட் அணியில் ஆர்ஸ்தீப் சிங்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் சர்துல் தாக்கூர் ஆகியோர் இடம் பிடித்திருக்கிறார்கள். இந்த டெஸ்ட் அணியில் சர்பராஸ்கான், ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்ஷித் ராணா மற்றும் முகமது சமி ஆகிய வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது.

சுப்மன் கில்

இந்நிலையில் கேப்டனாக சுப்மன் கில் தேர்வு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர், “நாங்கள் 1-2 சுற்றுப்பயணத்திற்கு கேப்டன்களைத் தேர்ந்தெடுக்கவில்லை. நாங்கள் எதிர்காலைத்தை கருத்தில் கொண்டு முன்னேற விரும்புகிறோம். கடந்த 2 ஆண்டுகளில் அவரிடம் (கில்) சில முன்னேற்றங்களைக் கண்டிருக்கிறோம். இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட தொடரை விளையாடுவது கடினமாக இருக்கும். ஒருவேளை நாம் கொஞ்சம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும், ஆனால் நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம், அதனால்தான் நாங்கள் அவரைத் தேர்ந்தெடுக்கிறோம்” என்று கூறினார்.

விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா

இதனைத்தொடர்ந்து விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் ஓய்வு குறித்து பேசிய அஜித் அகர்கர், “இவர்கள் போன்றவர்கள் ஓய்வு பெறும்போது, அதை நிரப்புவது எப்போதும் பெரிய சவாலாக இருக்கும். அஸ்வின் சில மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றார். அந்த மூன்று பேரும் நமது கிரிக்கெட்டின் ஜாம்பவான்கள். ஏப்ரல் தொடக்கத்தில் இருந்து விராட் , தனது பயணத்தை முடிக்க விரும்புவதாகக் கூறினார்… ஒருவேளை அது அவருக்கான சரியான நேரமாக இருந்திருக்கலாம். அது அவர் கூறும்போது, நாம் அதை மதிக்க வேண்டும். இருவரும் அந்த மரியாதையை பெற்றுள்ளனர். நாங்கள் நிச்சயமாக அவரை நிறைய மிஸ் பண்ணுவோம். அவர் 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 30 டெஸ்ட் சதங்களை அடித்த ஒரு நபர் ஆவார்” என்று கூறினார்.

ஜஸ்பிரித் பும்ரா

ஜஸ்பிரித் பும்ரா குறித்து அஜித் அகர்கர் கூறுகையில், “பிசியோ மற்றும் மருத்துவர்கள் எங்களிடம் கூறியபடி அவர் 5 டெஸ்ட்டுகளிலும் முழுமையாக விளையாட மாட்டார் என்று நான் நினைக்கிறேன். அவர் 3-4 டெஸ்ட்டுகளுக்கு கிடைக்குமா என்பது குறித்து மருத்துவர்கள் முடிவெடுப்பார்கள். அவர் 3-4 டெஸ்ட்டுகளுக்கு கிடைத்தால், அவர் எங்களுக்கு சில டெஸ்ட் போட்டிகளில் வெற்றிகளை பெற்று தருவதில், அணியின் ஒரு பகுதியாக அவர் இருப்பார்” என்று கூறினார்.

முகமது சமி

முகமது சமி குறித்து அஜித் அகர்கர் கூறுகையில், “இந்தத் தொடரிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளதாக மருத்துவ குழுவினர் எங்களிடம் கூறியுள்ளனர். அவர் தொடருக்குத் தகுதி பெற முயற்சித்து வருகிறார், ஆனால் கடந்த வாரமாக அவருக்கு பின்னடைவு ஏற்பட்டது, மேலும் அவருக்கு சில எம்ஆர்ஐ ஸ்கேன்கள் எடுக்கப்பட்டுள்ளன. அவர் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாது என்று நினைக்கிறேன். குறைந்தபட்சம் தொடரின் சில பகுதிகளுக்காவது அவர் இருப்பார் என்று நாங்கள் நம்பினோம், ஆனால் தற்போது அவர் உடல் தகுதி பெறவில்லை என்றால், காத்திருப்பது மிகவும் கடினம். அது துரதிர்ஷ்டவசமானது. அவரைப் போன்ற ஒரு பந்து வீச்சாளரை நாங்கள் எப்போதும் தேர்வு செய்யவே விரும்புவோம்” என்று அவர் கூறினார்.

ஸ்ரேயாஸ் ஐயர்

இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு முக்கிய இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அபாரமாக விளையாடிய நிலையில் அவருக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கவில்லை. இது குறித்து விளக்கம் அளித்த அஜித் அகார்கர், “ஸ்ரேயாஸ் கடந்த சில காலமாக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார். அது மட்டுமல்லாமல் உள்நாட்டு கிரிக்கெட்டு தொடரிலும் அவர் அபாரமாக ரன்களை சேர்த்து இருக்கிறார். ஆனால் தற்போதைய சூழலில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்ரேயாஸ் அவர்களுக்கு இடம் இல்லை” என்று விளக்கம் அளித்தார்.

இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் விவரம் பின்வருமாறு;-

சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (துணை கேப்டன்), ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங் மற்றும் குல்தீப் யாதவ்.



1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.