தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா போரிடுகிறது: எம்பிக்கள் குழு தலைவர் சசி தரூர் உறுதி

தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா தீரமாக போரிட்டு வருகிறது என்று எம்பிக்கள் குழு தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் எல்லை தாண்டிய தீவிரவாதம் குறித்து உலக நாடுகளிடம் எடுத்துரைக்க 7 எம்பிக்கள் குழுக்களை மத்திய அரசு நியமித்து உள்ளது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தலைமையிலான குழுவில் தேஜஸ்வி சூர்யா, சுஷாங்க் மணி திரிபாதி, சாம்பவி சவுத்ரி, பாலயோகி, மிலிந்த் தியோரா, ஷர்பாஸ் அகமது ஆகிய எம்பிக்கள் இடம் பெற்றுள்ளனர். இந்திய வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி தரண்ஜித் சிங் சாந்துவும் குழுவில் உள்ளார்.

சசி தரூர் தலைமையிலான எம்பிக்கள் குழு கயானா, கொலம்பியா, பிரேசில், அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்களை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இந்த குழு டெல்லியில் இருந்து நேற்று முன்தினம் கயானாவுக்கு புறப்பட்டது.

இதற்கு முன்பு நிருபர்களிடம் சசி தரூர் கூறியதாவது: அமைதியின் பயணத்தை தொடங்குகிறோம். உலகம் முழுவதும் அமைதி, ஜனநாயகம், சுதந்திரம் நிலைத்திருக்க வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. அதேநேரம் தீவிரவாதம், வன்முறை, படுகொலைகளை இந்தியா மிகக் கடுமையாக எதிர்க்கும்.

தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா தீரமாக போரிட்டு வருகிறது. ஒட்டுமொத்த இந்தியாவும் தீவிரவாதத்துக்கு எதிராக ஒருமித்து குரல் எழுப்பி வருகிறது. கட்சி வேறுபாடு இன்றி அனைத்து கட்சிகளின் எம்பிக்களும் எங்கள் குழுவில் இடம் பெற்றுள்ளனர். பாகிஸ்தானின் எல்லை தாண்டிய தீவிரவாதத்தால் இந்தியா பாதிக்கப்படுவது குறித்தும், அதற்கு எதிராக இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் உலக தலைவர்களிடம் எடுத்துரைப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

என்னுடைய முயற்சியால்தான் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறி வருகிறார். இதுகுறித்து சசி தரூர் கூறும்போது, “இந்த விவகாரத்தில் மத்திய அரசு ஏற்கெனவே தெளிவான பதில் அளித்துவிட்டது. இந்தியா, பாகிஸ்தான் இடையே யாரும் சமரசம் செய்யவில்லை” என்று தெரிவித்தார்.

இந்திய எம்பிக்கள் குழு நேற்று அமெரிக்காவின் நியூயார்க் நகரை சென்றடைந்தது. இதுகுறித்து சசி தரூர் நிருபர்களிடம் கூறியதாவது: எங்களது பயணத்தில் முதல் நாடாக கயானா தலைநகர் ஜார்ஜ் டவுன் செல்கிறோம். டெல்லியில் இருந்து ஜார்ஜ் டவுனுக்கு நேரடி விமான சேவை இல்லாததால் நியூயார்க் வழியாக ஜார்ஜ் டவுன் செல்கிறோம்.

அல்காய்தா தீவிரவாதிகளால் நியூயார்க்கின் உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்டது. இந்த நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினோம். மே 25-ம் தேதி கயானா, மே 27-ம் தேதி பனாமா, மே 29-ம் தேதி கொலம்பியா, மே 31-ம் தேதி பிரேசில், ஜூன் 3-ம் தேதி அமெரிக்காவில் பயணம் மேற்கொள்வோம். இந்த நாடுகளின் தலைவர்கள் மட்டுமன்றி இந்திய வம்சாவளியினரையும் சந்தித்துப் பேசுகிறோம். இவ்வாறு சசி தரூர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.