புதுடெல்லி,
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடப்பு நிதி ஆண்டுக்கான 10-வது நிதி ஆயோக் கவுன்சில் கூட்டம் இன்று காலை 11 மணியளவில் தொடங்கி நடந்து வந்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அனைத்து மாநில முதல்-மந்திரிகளும் பங்கேற்க வரும்படி அழைப்பு விடப்பட்டிருந்தது.
இந்த கூட்டத்தில் பங்கேற்கும் வகையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்ட இந்த நிதி ஆயோக் 2015-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. இந்த குழுவின் தலைவராக பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் நிதிஆயோக் கூட்டத்தில், 2047-ஆம் ஆண்டில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதில் மாநில அரசின் பங்கு குறித்து நிதிஆயோக் அதிகாரிகள் எடுத்துரைத்தனர். இதனைத் தொடர்ந்து, மாநில முதல்-மந்திரிகள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.
கடந்தாண்டு நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளாத நிலையில், இன்று நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றார். அதேபோன்று, தெலுங்கானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநில முதல்-மந்திரிகளும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஆனால், கர்நாடகா, கேரளா, பீகார், மேற்குவங்காளம் ஆகிய மாநில முதல்-மந்திரிகள் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அவர்களுக்கு பதிலாக அம்மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த சூழலில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று வந்த நிதிஆயோக் கூட்டம் நிறைவடைந்தது. முன்னதாக, நிதிஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்-மந்திரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதில், முதல் வரிசையில் பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகளுக்கு அடுத்ததாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இடம்பிடித்தார். மேலும், முதல் வரிசையில் இடதுபுறமாக பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகளுக்கு அடுத்து ஆந்திரப்பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு இடம்பிடித்தார்.
இந்நிலையில் டெல்லியில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
இதுதொடர்பாக டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்காக பிரதமர் மோடியிடம் முன்வைத்த கோரிக்கைகளைப் பட்டியலிட்டார். அதில், கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியதாகவும், செங்கல்பட்டு – திண்டிவனம் தேசிய சாலையை 8 வழிச்சாலையாக மேம்படுத்த வேண்டும் என்று கூறியதாகவும் தெரிவித்தார். மேலும், நிலுவையில் உள்ள நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கியதாகவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
முன்னதாக, வெள்ளைக்கொடியுடன் டெல்லி சென்றிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “என்னிடம் வெள்ளைக்கொடியும் இல்லை.. எடப்பாடி பழனிசாமியிடம் உள்ளதைப் போன்ற காவிக்கொடியும் இல்லை” என்று கூறினார்.
முன்னதாக மத்திய அரசு தர வேண்டிய நிதியை விடுவிக்க இக்கூட்டத்தின் வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கையில், “மத்திய வரியில் மாநிலங்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு தர வேண்டும் என நிதி ஆயோக் கூட்டத்தில் வலியுறுத்தினேன்” என்று அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
மேலும், மாநிலங்களுக்கு வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்ட 41 சதவீத வரிப்பகிர்வு வழங்கப்படுவதில்லை. தற்போது 33.16 சதவீதம் மட்டுமே மாநிலங்களுக்கு வரிப்பகிர்வாக வழங்கப்படுகிறது என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்டாலின் குற்றம் சாட்டி இருந்தார்.