டோக்கியோ: பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ஜப்பானில் தன்னிச்சையான ஆதரவு இருப்பதாகக் கூறிய முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், இந்தியாவின் அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவுக்கு ஜப்பானில் கிடைத்த வரவேற்பு திருப்தி அளிப்பதாக தெரிவித்தார்.
ஐக்கிய ஜனதாதளம் எம்.பி. சஞ்சய் குமார் ஜாவின் தலைமையில் ஜப்பான் சென்றுள்ள அனைத்துக் கட்சிக் குழுவில் இடம் பெற்றுள்ள முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியதாவது: இது மிகவும் திருப்திகரமான மற்றும் சிறப்பான பயணமாக இருந்தது. பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு தன்னிச்சையான ஆதரவு கிடைத்தது உற்சாகம் அளிக்கிறது. எந்த ஒரு பயங்கரவாதத்துக்கும் எதிராக இங்கே முழுமையான ஆதரவு இருக்கிறது. மேலும் பஹல்காமில் நமக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தி வைப்பதாக நாம் அறிவித்திருக்கிறோம். ஆனால் எதிர்காலத்துக்கு நாம் சில செய்திகளை வெளிப்படையாக வழங்கியிருக்கிறோம். ஜப்பான் போன்ற நாடுகள் அனைத்து வழிகளிலும் நமக்கு ஆதரவளிப்பது மிகவும் முக்கியமானது. பயங்கரவாதத்துக்கு எதிரான நமது நிலைப்பாட்டை ஜப்பான் திறந்த மனதுடன் ஆதரித்துள்ளது.
இந்தியாவா, பாகிஸ்தானா என்ற தேர்வு வரும் போது ஜப்பானுடனான நமது உறுதியான உறவு மிகவும் முக்கியமானதாகிறது. அவர்களுடன் நாம் கொண்டுள்ள பொருளாதார தொடர்பும், அவர்களுடனான அரசியல் தொடர்பும் முக்கியத்துவம் பெறுகிறது. எனவே நாம் இங்கு ஒரு சிறப்பான முன்னுரிமையில் இருக்கிறோம். இவ்வாறு சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.
ஐக்கிய ஜனதாதளம் எம்.பி. சஞ்சய் குமார் ஜா தலைமையிலான வெளிநாட்டு தூதுக்குழுவில் சல்மான் குர்ஷித் இடம்பெற்றுள்ளார். தற்போது ஜப்பானில் இருக்கும் இந்தக்குழு, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்குவதற்காக அடுத்து பிற கிழக்காசிய நாடுகளுக்கு பயணிக்க இருக்கிறது.
இந்தக் குழுவில், பாஜக எம்.பி.கள் அபராஜித சாரங்கி, பிரிஜ் லால், பிரசாந்த் பருஹா, ஹேமங் ஜோஷி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜான் பிரிட்டாஸ், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் பானர்ஜி, தூதுவர் மோகன் குமார் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.