அகமதாபாத்,
நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் மோதின. இதில் முதலில் பேட்டிங் சென்னை 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 230 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய குஜராத் 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் குஜராத்தை 83 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அபார வெற்றிபெற்றது.
இந்த ஆட்டம் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்துள்ள குஜராத், பஞ்சாப், பெங்களூரு, மும்பை அணிகளின் தரவரிசையில் மாற்றத்தை ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி 14 ஆட்டங்களில் 9 வெற்றி, 5 தோல்வியுடன் 18 புள்ளிகள் பெற்று பட்டியலில் குஜராத் முதல் இடத்தில் உள்ளது. 13 ஆட்டங்களில் 8 வெற்றி 4 தோல்வியுடன் 17 புள்ளிகள் பெற்று பட்டியலில் பஞ்சாப் 2வது இடத்தில் உள்ளது.
13 ஆட்டங்களில் 8 வெற்றி, 4 தோல்வியுடன் 17 புள்ளிகள் பெற்று பட்டியலில் பெங்களூரு 3வது இடத்தில் உள்ளது. 13 ஆட்டங்களில் 8 வெற்றி, 5 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று பட்டியலில் மும்பை 4வது இடத்தில் உள்ளது.
பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்துள்ள 4 அணிகளும் பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றன. புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு இறுதிப்போட்டிக்கு செல்ல 2 வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால் ஐ.பி.எல். தற்போது மேலும் விறுவிறுப்பு அடைந்துள்ளது.
அதன்படி, பஞ்சாப், மும்பை இடையே நாளை முக்கிய ஆட்டம் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றிபெறும் அணி புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும். அந்த அணி குவாலிபையர் 1 ஆட்டத்தில் விளையாடும்.
அதேவேளை, லக்னோ – பெங்களூரு ஆட்டம் நாளை மறுதினம் நடைபெறுகிறது. இதில் பெங்களூரு வெற்றிபெற்றால் அந்த அணி முதல் இரு இடங்களுக்குள் சென்று குவாலிபையர் 1ல் விளையாடும். பெங்களூரு தோல்வியடைந்தால் குஜராத் குவாலிபையர் 1ல் விளையாடும். பெங்களூரு எலிமினேட்டர் சுற்றுக்குள் செல்லும்.
பஞ்சாப் – மும்பை ஆட்டம் மழையால் தடைபட்டால் குஜராத் குவாலிபையர் 1ல் நுழையும். அதேபோல், லக்னோவுக்கு எதிராக பெங்களூரு வெற்றிபெற்றால் அந்த அணி குவாலிபையர் 1ல் நுழையும். பெங்களூரு தோல்வியடைந்தால் பஞ்சாப் குவாலிபையர் 1ல் நுழையும். இதனால் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்க அணிகள் தீவிர முயற்சி மேற்கொள்ளும் என்பதால் ஐ.பி.எல். விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.