‘பூஞ்ச் மக்களின் பிரச்சினைகளை தேசிய அளவில் எழுப்புவேன்’ – ராகுல் காந்தி உறுதி

ஸ்ரீநகர்: “பூஞ்ச் மக்கள் இரண்டு மூன்று முக்கியமான விஷயங்களை என்னிடம் தெரிவித்துள்ளனர். அவைகளை தேசிய அளவில் எழுப்புவேன்” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்த மாதத்தின் தொடக்கத்தில் பாகிஸ்தானின் எல்லை தாண்டிய குண்டுவீச்சு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று (சனிக்கிழமை) நேரில் சென்று சந்தித்தார். காலையில் விமானம் மூலம் ஜம்மு காஷ்மீர் சென்ற ராகுல் காந்தி அங்கிருந்து பூஞ்ச் சென்றார். அங்கு கிறிஸ்ட் பள்ளிக்குச் சென்ற அவர் பாகிஸ்தான் குண்டுவீச்சால் பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்தார்.

அங்கு மாணவர்கள் மத்தியில் பேசிய ராகுல், “நீங்கள் மிகவும் தைரியமான குழந்தைகள், நாங்கள் உங்களைப்பார்த்து பெருமையடைகிறோம். நீங்கள் ஆபத்தையும், அச்சுறுத்தும் சூழலையும் சந்தித்துள்ளீர்கள். ஆனால் கவலைப்படாதீர்கள், எல்லாம் விரைவில் இயல்புக்கு திரும்பும். பள்ளியில் நன்றாக படித்து, நன்றாக விளையாடி நிறைய நண்பர்களை உருவாக்கி வாழ்வில் முன்னேறுங்கள்.” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து குண்டு வீச்சுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். குண்டுவீச்சு தாக்குதலால் பாதிக்கப்பட்ட வீடுகளையும் பார்வையிட்டார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், “இது மிகப்பெரிய சோகம், பலர் உயிரிழந்துள்ளனர். பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. நான் மக்களிடம் பேசி அவர்களின் பிரச்சினையை புரிந்து கொள்ள முயற்சித்தேன்.

அவர்கள் என்னிடம் 2-3 முக்கியமான பிரச்சினைகளைக் கூறி அவை குறித்து கேள்வி எழுப்புமாறு தெரிவித்துள்ளனர். நான் அவைகளை தேசிய அளவில் எழுப்புவேன்.” என்று தெரிவித்தார்.

பஹல்காமில் ஏப்.22-ம் தேதி 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்ட பயங்கவாத தாக்குதலுக்கு பின்பு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஜம்மு காஷ்மீருக்குச் செல்வது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக ஏப்.25-ம் தேதி பஹல்காம் தாக்குதலில் பாதிப்படைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது துணைநிலை நிலை ஆளுநர், ஜம்மு காஷ்மீர் முதல்வரை சந்தித்தும் பேசினார்.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக மே 7-ம் தேதி, இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் துல்லியத் தாக்குதல் நடத்தியது. இதற்கு எதிராக மே 7 – 10 தேதி வரை பாகிஸ்தான் எல்லை தாண்டி இந்திய பகுதிகளில் குண்டு வீசியும், ட்ரோன், ஏவுகணைகள் தாக்குதலும் நடத்தியது. இதில் 28 பேர் கொல்லப்பட்டனர், இதில் 13 பேர் பூஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.