குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். மேலும் 9,000 எச்.பி. திறன் கொண்ட மின்சார ரயில் இன்ஜினையும் அறிமுகம் செய்து வைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக நேற்று குஜராத் மாநிலம் சென்றடைந்தார். தாஹோத் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், ரூ.24 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். இதில் சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும் தாஹோத் நகரில் நிறுவப்பட்டுள்ளள ரயில் இன்ஜின் தொழிற்சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட முதலாவது 9 ஆயிரம் எச்.பி. திறன் கொண்ட மின்சார ரயில் இன்ஜினை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இங்கு தயாராகும் ரயில் இன்ஜின்கள் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. இந்த இன்ஜின்கள் மூலம் ரயில்வே துறையின் சரக்கு போக்குவரத்து திறன் அதிகரிக்கும். இது எரிசக்தி செலவை மிச்சப்படுத்துவதுடன் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் என கூறப்படுகிறது.
ரூ.21,405 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள இந்த ரயில் இன்ஜின் தொழிற்சாலைக்கு கடந்த 2022-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. 3 ஆண்டில் தொழிற்சாலை கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இங்கு தயாராகும் ரயில் இன்ஜின்கள் 4,600 டன் சரக்குகளை இழுத்துச் செல்லும் திறன் வாய்ந்தது. இங்கு ஆண்டுக்கு 120 இன்ஜின்கள் தயாராகும். இதன் மூலம் 10 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்.
பிரதமர் மோடி தொடங்கி வைத்த அல்லது அடிக்கல் நாட்டிய திட்டங்களில் சில ரயில்வே துறைக்கும் சில மாநில அரசுக்கும் சொந்தமானவை ஆகும். வெரவல் மற்றும் அகமதாபாத் இடையிலான வந்தே பாரத் விரைவு ரயில் மற்றும் வல்சாத், தாஹோத் இடையிலான புதிய விரைவு ரயில் சேவையையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
புஜ் நகரில் ரூ.53,400 கோடி திட்டங்கள்: தாஹோத் நகரில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி நேற்று மாலை புஜ் நகருக்கு சென்றார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு தொடர்பான ரூ.53,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்த திட்டங்களால் கட்ச், ஜாம்நகர், அம்ரேலி, ஜுனாகத், கிர் சோம்நாத், அகமதாபாத், தபி மற்றும் மஹிசாகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பயனடைவார்கள்.