நியூஜெர்சி: உக்ரைன் மீது தொடர்ந்து மூன்றாவது நாளாக இரவு நேரத்தில் ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை கொண்டு ரஷ்யா வான்வழி தாக்குதல் மேற்கொண்டது. இந்நிலையில், ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எதிர்வினை ஆற்றியுள்ளார். குறிப்பாக ரஷ்ய அதிபர் புதினை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
“ரஷ்யாவின் புதின் உடன் சிறந்த நட்பு ரீதியான உறவை நான் கொண்டுள்ளேன். இப்போது அவருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. தேவையின்றி பலரை கொல்கிறார். காரணமே இல்லாமல் உக்ரைன் நாட்டின் பல்வேறு நகரங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். அவரது செயல் எனக்கு அறவே பிடிக்கவில்லை. இந்தப் போக்கு ரஷ்யாவின் வீழ்ச்சிக்கு வித்திடும்” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியையும் ட்ரம்ப் சாடியுள்ளார். “அவரது வாய் பேச்சுதான் பிரச்சினைகளுக்கு காரணமாக அமைகிறது. அவர் அமைதியாக இருப்பது நல்லது” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா உக்கிர தாக்குதல்: ஒரே இரவில் 367 ட்ரோன்களை ஏவி உக்ரைன் முழுவதும் மிகப் பெரிய வான்வழித் தாக்குதலை ரஷ்யா நடத்தியுள்ளது. 2022 தொடங்கிய உக்ரைன் ரஷ்யா போரில் நடந்திருக்கும் மிகப் பெரிய வான்வழித் தாக்குதலாக இது அமைந்துள்ளது. ரஷ்யாவின் இந்த தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
கீவ், கார்கிவ், மைக்கோலைவ், டெர்னோபில் மற்றும் கிமெல்னிட்ஸ்கி என பரவலான அளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனிடையே உக்ரைன் விமானப்படை 267 ட்ரோன்கள் மற்றும் 45 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளது. என்றாலும், உக்ரைனுக்கு பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகள் உள்பட உள்கட்டமைப்புகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
என்ன ஆனது போர் நிறுத்தம்? – இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றது முதல் ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து பொதுவெளியில் பேசி வருகிறார். ‘யுத்தம் இல்லாத உலகம் வேண்டும்’ என்பது ட்ரம்ப் கருத்தாக உள்ளது. போர்நிறுத்தம் தொடர்பாக ட்ரம்ப் மத்தியஸ்தம் செய்ய கடந்த வாரம் துருக்கியில் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடந்த நேரடி பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படவில்லை.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று நேரடி பேச்சுவார்த்தை ஏதும் இல்லை ரஷ்ய தரப்பு தெரிவித்தது. இதற்கு ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யா மீது புதிய தடைகளை விதித்தது. அதே நேரத்தில் ரஷ்யா மீதான தடைகள் மற்றும் வரிகளை அதிகரிப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அச்சுறுத்திய நிலையில், இதுவரை அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.