சென்னை: ரயிலில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி (ஸ்லீப்பர் பெட்டிகளில்) பெட்டிகளில் டிக்கெட் கிடைக்காமல் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளுக்கு ஏசி வகுப்பு பெட்டிகளில் காலியாக உள்ள இடங்கள் கூடுதல் கட்டணம் இன்றி ஒதுக்கும் வசதியை மேலும் 2 நிலைகள் வரை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.
இதன் மூலமாக, 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளுக்கு 3-ம் வகுப்பு ஏசி அல்லது 2 -ம் வகுப்பு ஏசி பெட்டிகளில் காலியாக உள்ள இடங்கள் கூடுதல் கட்டணம் இன்றி ஒதுக்கப்பட உள்ளது.
பயணிகளின் காத்திருப்போர் பட்டியலை குறைக்க, கூடுதல் பெட்டிகள் சேர்ப்பது உட்பட பல நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் எடுத்து வருகிறது. இது தவிர, ஒரு ரயிலில் 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு 3-ம் வகுப்பு ஏசி பெட்டிகளில் காலியிடங்கள் இருந்தால், அதில் ஒதுக்கீடு செய்யும் முறையும் இருக்கிறது. இந்த முறை கடந்த 2006-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது காத்திருப்புப் பட்டியலில் உள்ள பயணிகளை மேம்படுத்துவதற்கான திட்டம் என்று அழைக்கப்படுகிறது.
கூடுதல் கட்டணம் இல்லை: இந்நிலையில், இத்திட்டத்தை விரிவாக்கம் செய்ய ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. அதாவது, ரயிலில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டியில் காத்திருக்கும் பயணிகளுக்கு 3-ம் வகுப்பு ஏசி பெட்டி, 2-ம் வகுப்பு ஏசி பெட்டிகளில் காலி இடங்கள் இருந்தால், அவற்றில் கூடுதல் கட்டணம் இன்றி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் 3-ம் வகுப்பு எக்னாமிக் பெட்டியில் காத்திருப்போர் பட்டியல் உள்ள பயணிகளுக்கு 3-ம் வகுப்பு ஏசி, 2-ம் வகுப்பு ஏசி பெட்டிகளில் காலி இடங்கள் இருந்தால் ஒதுக்கப்படும். இதுபோல, 3-ம் வகுப்பு ஏசி பெட்டிகளில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு 2-ம் வகுப்பு அல்லது முதல் வகுப்பு குளிர்சாதன பெட்டிகளில் காலி இடங்கள் இருந்தால் கூடுதல் கட்டணமின்றி இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படும். இது தவிர, ரயிலில் இரண்டாம் வகுப்பு முன்பதிவு இருக்கை பெட்டியிலும் இந்த முறை நடைமுறைப்படுத்தப்படும்.
இதுபோல, இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டியில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளுக்கு முதல்வகுப்பு ஏசியில் காலி இடமிருந்தால் ஒதுக்கீடு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகவல் ரயில்வே வாரிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சுற்றறிக்கை அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஓய்வுபெற்ற மூத்த ரயில்வே தொழிற்சங்க தலைவர் மனோகரன் கூறும்போது, “காத்திருப்போர் பயணிகளை மேம்படுத்துவதற்கான திட்டம் விரிவுப்படுத்தப்பட உள்ளது வரவேற்கதக்கது. இதன்மூலமாக, ரயில்வேக்கும் கணிசமான வருமானம் கிடைக்கும். அதிக பயணிகளும் பயனடைவார்கள்” என்றார்.